ஒற்றை எழுத்தில் ஐந்து வரிகளில் ஒரு ராமாயணக் கவிதை

த என்ற எழுத்துவரிசையை மட்டும் வைத்து கைகேயி வரத்தை பற்றிய ஒரு பாடலை சமீபத்தில் ரசித்தேன்.


இப்படிக்கு புரியாதசாமி [2]

உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி
84 பேரு மேல கொலை கேஸ் இருக்கு
17 பேரு மேல திருட்டு கேஸ் இருக்கு


காளமேகப்புலவரின் காக்கா கவிதை - 2010ல் எழுதியது

வர வர சின்ன சின்ன ஆசைகள் நிறையா வருது. இந்த வாரம் மாட்டினவரு, நம்ம காளமேகப் புலவர் (அவர் ஆத்மா என்னை மன்னிக்க வேண்டும்).கதிர்கா கவிதைகள் [5]

'முரளி'யிஸம்
பல முறை முயற்சித்தாலும்
எப்போது காதலைச் சொல்லப்போகும்போதும்
தயக்கமாகத்தான் இருக்கிறது!
காதலிகள் வேறுவேறு என்பதாலோ?


கல்வி விலை
டிவி இலவசம் - அமைச்சர் சொல்கிறார்
வேட்டிசேலை இலவசம் - அமைச்சர் சொல்கிறார்
அடுப்பு இலவசம் - அமைச்சர் சொல்கிறார் 
அரிசி சலுகைவிலை - அமைச்சர் சொல்கிறார்
கல்வி? அமைச்சரின் பி.ஏ.வைப் பார்க்கச் சொல்கிறார்
பெட்டி வாங்கி அட்மிசன் தருபவர் பி.ஏ. தானாம்!

பரபர  நிமிடங்கள்
ஐந்து நிமிடத்தில்
எல்லா வேலையையும் முடிக்க வேண்டும்.
பாத்திரம் கழுவப் போட்டு,
துணிகளை துவைக்கப் போட்டு,
வேலைக்காரிக்கு கதவு திறந்துவிட்டு,
அப்பாடியென உட்கார்ந்தாள்.
நல்ல வேளை இன்னும்
அடுத்த சீரியல் ஆரம்பிக்கவில்லை!


நம்பிக்கை
அணு ஆயதப்போரில் அன்று
உலகமே அழிந்தது!
மறுநாள்
சூரியன் மறுபடியும் உதிக்கிறான்,
ஒன்றிரெண்டு உயிரனங்களாவது
பிழைத்திருக்கும் என்றோ?


இப்படிக்கு புரியாதசாமி

நிஜமாவே எனக்கு புரியல பாஸ்!!!

 சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். மிகவும் கவலை தந்த செய்தி.
மேற்கு வங்க மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது, சரக்கு ரயில் மோதியதில் ஏழு யானைகள் பலியாயின. விரிவான செய்திக்கு இங்கே செல்லவும். ஒன்றும் அறியாத யானைகள் மனிதனின் தவறுகளினால் பலியானது மிகவும் துயரமான விஷயமே.

இவ்வாறு யானைகள் பலியானதாய் செய்திகள் வந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு செய்தியும் வெளியானது. அதாவது, சுற்றுப்புறச்சூழல் அமைச்சர், யானைகள் பலியானதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு யானைகள் மேல் உள்ள அக்கறை பாராட்டுக்குரியது. அதற்கு ரயில்வேத்துறை அமைச்சரும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடுத்த செய்தியும் வந்துள்ளது.

இதுல எனக்கு என்ன புரியலன்னு கேக்குறீங்களா? கடந்த ஆறு மாசத்துல மட்டும் இதுவரைக்கும் நடந்த ரயில்வே விபத்துகளில் கிட்டத்தட்ட 200 பேர் (பாவப்பட்ட மனுஷப் பிறவிங்கதான்) இறந்திருக்காங்க. அவையெல்லாம் ஒருநாள் ரெண்டுநாள் செய்திகளா வந்ததே தவிர எந்த ஆளுங்கட்சி அமைச்சரிடமிருந்தும் கண்டனச் செய்தியோ, ரயில்வே அமைச்சரிடமிருந்து நடவடிக்கை எடுத்த செய்தியோ வந்ததாக ஞாபகம் இல்லை.

ஒருவேளை, நம்ம கூட நாய் நரின்னு எதையாவது கூட்டிட்டுப்போய் அதுவும் நம்ம கூட இறந்தாதான் இந்த மாதிரி உடனடி நடவடிக்கை எடுப்பாங்களோ? இல்லைன்னா, யானைகளுக்கு கவலைப்பட சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் இருக்குற மாதிரி மனிதர்களுக்கு கவலைப்பட மனிதர்குல அமைச்சர் என்று ஒருத்தர அப்பாயின்ட் பண்ணனும்மோ?

நிஜமாவே எனக்கு புரியல பாஸ்!!!

- புரியாதசாமி


தமிழில் சொந்தமாய் ஒரு Palindrome கவிதை

தமிழுக்கு வந்த சோதனையாய் எனக்கு இந்த ஆசை வந்தது.

Palindrome என்ற வார்த்தை பலருக்கும் பரிட்சியமாக இருக்கும். அதாவது, ஒரு வார்த்தையையோ வரியையோ இடமிருந்து வலமாக படித்தாலும் வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக 'விகடகவி' என்ற வார்த்தை சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்து இவற்றை எழுதுவதைக் காட்டிலும் தமிழில் எழுதுவது சற்று கடினம்தான். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய வரிகள் ஆங்காங்கே காணப்படிகின்றன. ஒரு முழுப்பாடலையே அப்படி எழுதுவது அதனினும் கடினம்தான்.

அப்படிப்பட்ட முழுப்பாடல், திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தில் உண்டு. அதைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும். திருக்குறளை கோனார் நோட்ஸில் மட்டுமே படித்த பரம்பரை என்பதால் எனக்கு அந்த வரிகள் சுத்தமாக புரியவில்லை. அந்த வரிகளுக்கான அர்த்ததிற்கு இங்கே செல்லவும்.

ஔவையின் இந்த வரிகள் படிக்க சற்று சுலபமானது (இதையும் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை!!).
'நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ'.
 'நீங்காத பெரிய தவத்தையுடைவனே! மிகுந்த மயக்க வேட்கை கெடாது, அழகிய பெண்ணுடைய ஆசையை நீக்குவாயாக'

இதைவிட சற்று சுலபமாக ஏதாவது உண்டா என்று இணையத்தை துழாவிய போது அண்ணாகண்ணனின் இந்த வரிகளைக் கண்டேன்.
வாய்போல் சரிவில் தினமழை கோணிபிடி
கோவில் தோத்தோத் தோத்திரமயம் - ஆம்ஆம்
யமரதித் தோத்தோத் தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா
 அர்த்தமறிய, இங்கே செல்லவும்.

எல்லாம் சரி, சொந்த பிட்டாய் என்ன செய்யலாம்னு யோசிட்ட இருந்தப்ப, எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமான்னு களத்துல இறங்க முடிவு பண்ணிட்டேன். முடிந்தவரை நடைமுறைத் தமிழ்ல எழுதலாம்னு ரெண்டு மணி நேரம் கழிச்சு பிடிச்சுட்டேன். இதோ நம்ம படைப்பு.

பக்தி
பூ தந்தம் பசு வருக - தேயாதே
கருவ சுபம் தந்த பூ

(கருவம் -  கரு, உள்மையம், முதன்மை)
அதாவது,  பூ, தந்தம், பசு என்று சிறியது முதல் பெரியது வரை எந்த செல்வம் வந்தாலும் உள் மனதில் உண்மையான சந்தோஷம் தந்த பூ போன்ற பக்தி மனதில் என்றும் குறையாது!!! (நல்லா இல்லைன்னா விட்டுறுங்கோ)

டிஸ்கி: மேலே உள்ள பதிவ படிச்சுட்டு என்னை பெரிய இலக்கியவாதின்னு நீங்க நினைச்சு செப்டம்பர் Fool ஆயிட்டங்கன்னா அதற்கு நான் பொறுப்பல்ல.

பிட் நோட்டீஸ் - 9/27

சமீபத்தில் ரசித்த ஒரு நகைச்சுவை உரையாடல்
அவன்: யானையை விட பெருசா இருக்கும். இருந்தாலும் எடையே இருக்காது. ஆனா லட்சம் பேர் சேர்ந்தாலும் அத தூக்க முடியாது. அது என்ன?
இவன்: தெரியலடா....
[உங்களுக்கும் தெரியலையா? விடை இந்த பதிவின் கடைசியில்]

Business Tips - சின்னஞ்சிறுகதை
அவருக்கு அன்று 30-வது திருமண நாள்.
தினமும் சாமி கும்பிடும் அவரிடம் அன்று கனவில் கடவுள் தோன்றி
"பக்தா! உனக்கு என்ன வரம் வேண்டும். ஒரே வரம்தான், ஒருவர் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். என்ன வேண்டும் கேள்" என்றார்.
மிகுந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன அவர்,
"என் மனைவிக்கு 50 வயசாயிடுச்சு. எனக்கு இளமையான மனைவிதான் பிடிக்கும். அதனால என் மனைவி என்னைவிட 25 வருஷம் இளமையா இருக்கணும். அதுக்கு வரம் கொடுங்க" என்றார்.
கடவுள் சிரித்துக்கொண்டே நாளை காலை எழுந்திருக்கும்போது வரம் நிறைவேரும் என்று கூறிவிட்டு மறைந்தார்.
மறுநாள் விடிந்தது. அவர் எழுந்து மனைவியைப் பார்த்தார். அவர் மனைவி இளமையாக எல்லாம் மாறவில்லை. வெறும் கனவுதானா அது என்று கஷ்டப்பட்டு எழுந்து கண்ணாடியைப் பார்த்தார். 55 வயதான அவர் 75 வயதாய் மாறிவிட்டிருந்தார்.

நீதி:
நம்ம பிஸினசுல இன்னொருத்தரோட உதவி கேட்டோம்னா, என்ன உதவி, அது எப்படி வேணும்னு க்ளியரா சொல்லணும். இல்லைன்ன அந்த உதவியே உபத்திரவமாகிவிடும்.
[எங்கோ கேட்டது]

ரசித்த ஹைக்கூ
சகுனம்
பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?

ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்
[ரசிகவ் ஞானியார்]

பி.கு: இரண்டாவது கவிதை முதலில் புரியவில்லை. பின்னர் மற்றொரு நண்பரின் கருத்து மூலம் புரிந்தது. அதாவது, புதுத்துணிக்கு வழியில்லாத்தால், தாய் தன் சேலையின் பாதியை மகளுக்கு தருகிறாராம்.


ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கான விடை,
அவன்: யானையின் நிழல்


கதிர்கா கவிதைகள் [4]

விவசாயி
விதைத்து நெல்,
பல மாத உழைப்பில்,
விளைந்தது கடன்.

பத்தரப்பதிவு
ப்யூன் ஐந்தாயிரம் லஞ்சம்
கேட்டவுடன் ஏமாற்றுக்காரனென
எரிச்சல் வருகிறது,
ஐம்பது லட்ச வீட்டை
இருபது லட்சத்துக்கு
பதிய சென்றவனுக்கு!!!

வேலைவாய்ப்பு அலுவலகம்
கொடுக்க வேலையில்லை,
அங்கே வேலை(!) செய்யும்
பத்து பேருக்காக
தினமும் திறந்து வைத்திருக்கிறார்கள்!!

அம்மா மகள் சண்டை
அவர் வந்தவுடன் அவளை அதட்ட சொல்ல வேண்டும்
அம்மா மனதுக்குள் நினைத்தாள்!
அப்பா வந்தவுடன் உன்னை திட்ட சொல்லுறேன்
அம்மாவிடம் மகள் சொன்னாள்!!


எங்கள் தெரு சிட்டுக்குருவிகள் எங்கே போயின?

எங்கள் தெரு சிட்டுக்குருவிகள் எங்கே போயீன?

இன்றோடு எனக்கு பதினாறு வயது!
நான் ஆறாவது பிறந்த நாளை இந்த தெருவுக்கு வந்த பிறகுதான் கொண்டாடினேன்
ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளுக்கு
மிட்டாய் கொடுக்க போனபோது
என் தலைக்குமேல் பத்துபதினைந்து சிட்டுக்குருவிகள்...

என் எட்டாவது வயதில், எங்கள் வீட்டின் முன்
நான் நட்டிருந்த கொய்யாச்செடி முளைப்பதற்குள்
சாக்கடைக் குழாயாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த பத்துபன்னிரெண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

என் பத்தாவது வயதில், எங்கள் வீட்டின் முன் இருந்த மாமரம்
நான் பள்ளி சென்றுவருவதற்குள்
மின்சாரக் கம்பமாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த எழெட்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

என் பன்னிரெண்டாம் வயதில், எங்கள் வீட்டின் முன் இருந்த மண்ரோடு
நான் ஆயா வீட்டில் லீவு முடிந்து வருவதற்குள்
தார் ரோடாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த நாலைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

என் பதினாலாம் வயதில், எங்கள் வீட்டு பழைய டிவி
புது கேபிள் மாட்டியதிலிருந்து
எண்பது சேனல்கள் கொண்டதாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

நேற்று எங்கள் வீட்டில்
இன்டெர்நெட் வாங்கியதலிருந்து
கம்ப்யூட்டரில் உலகத்தையே பார்க்கலாமாம்!
ஆனால் இப்போது எங்கள் தெருவில்
ஒரு சிட்டுக்குருவியைக் கூட பார்க்க முடியவில்லை,
அவையெல்லாம் எங்கே போயின உங்களுக்குத் தெரியுமா?
எனக்கு சிட்டுக்குருவிகளை ரொம்ப பிடிக்கும்!!!


பிட் நோட்டீஸ் - 9/24

அயோத்தி வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
வானத்தில் கிழக்கு மேற்கு எனப் பாகுபாடு கிடையாது. எல்லா திசையும் ஒன்றுதான். அதைப் பார்க்கும் மனிதரின் மனம்தான் அதை வேறுபடுத்தி பார்க்கிறது - சொன்னது புத்தர்

சமீபத்தில் படித்த ஜென் கதை
இரு துறவிகள் சாலையில் சென்று கொன்றிருந்தனர். சாலையின் நடுவே மழைநீர் தேங்கி முழங்கால் அளவு இருந்தது. வெள்ளையுடை அணிந்து தேவதை போன்ற இளம்பெண் ஒருத்தி அந்த குறுகிய சாலையில் நடந்தால் உடை அழுக்காகி விடுமென்று ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருந்தாள். இந்த இரு துறவிகளைக் கண்டவுடன் தனக்கு உதவுமாறு கேட்டாள். இளைய துறவி சற்று தயங்கினார். மூத்த துறவி தாமதிக்காமல் அவளை கைகளில் தூக்கி சாலையை கடக்க உதவினார்.
அவர்கள் இருப்பிடத்திற்கு வந்த பிறகு, பல மணிநேரம் கழித்து, இளைய துறவி மூத்த துறவியிடம் கேட்டார், 'அய்யா! துறவியாகிய நாம், பெண்களை தொடக்கூடாது அல்லவா? நீங்கள் அந்த பெண்ணை தூக்கியது சரியில்லை அல்லவா?'. மூத்த துறவி சொன்னார், 'நான் தூக்கிய பெண்ணை சில நிமிடங்களில் இறக்கி வைத்துவிட்டேன் சகோதரரே! நீங்கள் தான் அந்த பெண்ணை இன்னும் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்'

நான் ரசித்த ஹைக்கூ
கடற்கரையில் நினைவுக்காக
அவள் விட்டுச் சென்றச் சுவடுகள் -
வருகிறது அலை!

திருவிழாவில் மகிழ்கிறது,
பலிகடா ஆடு -
வாக்காளன்!
[சந்தர் சுப்ரமணியன்]

படித்த ஜோக்
அவனை மூளை மாற்ற அறுவைச்சகிச்சைக்கு சென்றான். சாதா மூளை ஒரு லட்சம், ஸ்பெசல் மூளை பத்து லட்சம் என்று அறிவிப்பு பலகை இருந்தது. டாக்டரிடம் ஸ்பெசல் மூளை என்றால் என்ன என்று கேட்டான். டாக்டர் சொன்னார், 'சாதா மூளை சாதாரண குடிமகனுடையது. ரொம்ப யூஸ் செய்யப்பட்டது. ஸ்பெசல் மூளை அரசியல்வாதியுடையது. ஒருமுறை கூட யூஸ் செய்யப்படாதவை'


எந்திரன் பார்க்கலையோ - சிறுகதை

எந்திரன் வந்தாலும் வந்தது, என் உயிரே போகுது. எனக்கு ரஜினி மேலேயும் கோபமில்லை, சன் டிவி மேலேயும் கோபமில்லை. அவங்க கனவைக் காசாக்க, காசைக் கரியாக்கி எடுத்துருக்காங்க. படம் ஓடுனாலும் சரி, படம் பார்க்கிறவங்க ஓடுனாலும் சரி அவங்க பிரச்சனை. எனக்கு கோபம் அவங்க மேல இல்லை. யார் மேல கோப்படுறதுன்னே தெரியல. என் கோபம் அப்படி.

நான் அமெரிக்காவில் ஏதோ ஒரு நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண தகவல் தொழில்நுட்ப தொழிலாளி. இந்திய ராஜா அமெரிக்காவில் பிச்சையெடுத்தானாம் என்ற கதையாக 'விசா'வைத்தக்கவைக்க ஊரும் வேலையும் மாறி மாறி இந்த ஊரு வந்திருக்கிறேன். நான் இருக்கும் இந்த ஊரில் எல்லா அமெரிக்க பெருநகரைப் போலவும் இந்தியர்கள் அதிகம். என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கும் உண்டு. சராசரிக்கும் குறைவான வசதிகளே கொண்டதால் அந்த திரையரங்கிற்கு அமெரிக்க மக்கள் அவ்வளவாக வர மாட்டார்கள். அந்த காரணத்தினால், அங்கு இந்தியப்படங்களே வெளியிடப்படும். அதிலும் பெரும்பாலும் தெலுங்குப்படங்களே ஓடும். எப்பவாவதுதான் தான் தமிழ் படங்கள் வரும். அப்படித்தான் இப்போது எந்திரன் வந்துள்ளது.

இது சந்தோஷமான விஷயந்தானே என்கிறீரகளா? அப்படியென்றால் உங்களுக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் வித்யாசமில்லை. எனக்கு எந்திரன் பார்க்க விருப்பமில்லை. அதற்கு பெரிதான காரணமென்று எதுவுமில்லை. எனக்கு பாரக்க வேண்டாமென்று தோன்றியது, அவ்வளவுதான். அவ்வாறு தோன்றியது தப்பில்லை தானே. ஆனா எது தப்புன்னா அந்த திரையரங்கம் என் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இருந்ததுதான்.

போன வாரம் தான் அந்த படம் இங்கு வெளியிடப்பட்டது. இந்த ஊரில் எனக்கு தெரிந்த தெரியாத எல்லா தமிழர்களும் (சில தெலுங்கர்கள் உட்பட) பார்த்துவிட்டனர். பார்க்க வந்த சிலர் என் வீடு பக்கத்தில் இருப்பதால் என் வீட்டற்கும் வந்தனர். என் மனைவி வேறு இந்தியா சென்றிருப்பதால் போன் செய்யாமல் கூட வந்தனர். (மனைவி இருந்தால் முதல் நாளே போன் செய்து நாளை வரலாமா என்று கேட்டுத்தான் வருவர். இது என் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையா அல்லது எனக்கு கொடுக்கும் அவமரியாதையா என்று தெரியவில்லை)

வந்தவங்க எல்லோரும் சொல்லிவச்ச மாதிரி கேட்குற ஒரே கேள்வி, 'எந்திரன் பார்த்துட்டயா?' இல்லைன்னு சொன்னா, 'ஏன் பார்க்கல, ரஜினி பிடிக்காதா, கமல் ரசிகரா, ஷங்கர் பிடிக்காதா, சளி பிடிக்காதா'ன்னு அடுத்தடுத்து கேள்விக்கணைகள். பதில் சொல்லி மாளல. கடைசில அடுத்த வாரத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கேன்னு சொன்னாதான் விட்டனர். அதிலையும் ஒருத்தர் ஏன் இந்த வாரமே பார்க்கலைன்னு கேட்டாரு, என்ன சொல்லுறதுன்னு தெரியல அப்ப, சும்மா வழிஞ்சு வைச்சேன்.

சரி வீட்டுக்கு வர்றவங்க தான் இப்படின்னா, நேத்து வால்மார்ட் கடைக்குப் போனேன். (வால்மார்ட் இந்தியாக்கு வருதாமே, அண்ணாச்சி கடைகள் எல்லாம் பாவந்தான்). கடைல, ரெண்டு பேர் இதே கேள்விகளைக் கேட்டனர். அடுத்த வாரம்னு இன்ஸ்டென்ட் பதில் சொன்னேன்.

இன்னைக்கு திங்கட்கழமை ஆபிஸ் போனேன். ஆபிஸ்ல ஒரு மெக்சிகன் கேட்டான், 'உன் வீட்டுக்குப்பக்கத்துல உள்ள திரையரங்குள்ள ரோடு வரைக்கும் க்யூல நின்னாங்களே என்ன விஷயம்'. நான் எந்திரன், ரஜினி பற்றியெல்லாம் எடுத்து சொன்னேன். அவனும் கேட்டான் நான் பார்த்து விட்டேனா என்று. இல்லையென்று சொன்னேன், மற்றவர்களைப்போலவே ஏன், எதற்கு என ஆரம்பித்துவிட்டான். அவனிடமும் அடுத்த வாரம்னு பதில் சொல்லிவிட்டேன்.

மெக்டொனால்டில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது பக்கத்து வீட்டுக்காரரும் அதையே கேட்டார். அதையே சொன்னேன்.

வீட்டுக்குள் டிவியை ஆன் செய்துவிட்டு ஷோபாவில் உட்கார்ந்தேன். விஜய் டிவியில் போட்ட நிகழ்ச்சியையே மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தனர். (விஜய் டிவி அமெரிக்காவில் மட்டுந்தான் அப்படிப் பண்ணுறாங்களான்னு தெரியல). பக்கத்து வீட்டு நண்பர் போன் செய்தார். இந்த வாரத்தோட தமிழ் எந்திரன தூக்கிட்டு தெலுங்க Robo-வ (எந்திருடுன்னு ஏன் பேர் வைக்கல?) போடுறாங்களாம். அதனால இந்த வாரமே பார்க்கச் சொன்னார். நன்றி சொல்லி போனை வைத்தேன்.

அடப் போங்கய்யா. நானும் நாளைக்கு க்யூல நின்னு எந்திர ஜோதில ஐக்கியமாயிட வேண்டியதுதான். அந்த படத்த பார்க்காம கோட்டை விட்டா, ஏன் பார்க்காம விட்டுட்டங்குற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது.

[பின் குறிப்பு: இந்த பின் குறிப்பை எழுதுவது மேலே சொன்ன நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு. எந்திரன நேத்து பார்த்துட்டேன். படம் எப்படின்னு கேட்கிறீங்களா? அட, நீங்க இன்னுமா திருந்தல. என்னால முடியல. இப்பவும் சொல்லுறேன், எனக்கு யார் மேல கோப்படுறதுன்னே தெரியல. என் கோபம் அப்படி]


கதிர்கா கவிதைகள் [3]

அலட்சியம்
சட்டையோரக் கறையை தண்ணீர் விட்டுத் துடைத்தேன்!
துடைத்த பின்னர் தரையில் விழுந்து
வெள்ளைத் துண்டு அழுக்கானது,
கவலையின்றி மிதித்துச்சென்றேன்!
ஹோட்டல் அறை!!!

சுதந்திரம்
'டேய் திரும்பாதே'
'டேய் பேசாதே'
'டேய் நேரா நில்லு'
ஆசிரியர் எல்லா மாணவரையும்
கட்டுக்கோப்பாய் நிற்க வைத்திருந்தார்!
சுதந்திர தின கொடியேற்ற விழாவாம்!!

நல்ல நேரம்
ஐந்து முதல் ஆறரை வரை நல்ல நேரமாம்,
சிலிர்ப்பிய ஆட்டை ஐந்தரைக்கு வெட்டினர்!
சத்தம் வருவதற்குள் சகலமும் அடங்கியது!
நல்ல நேரம் மனிதருக்கு மட்டும் தானோ?
ஆடுகளுக்கு இல்லையோ?


சின்னஞ்சிறுகதை - இரண்டே வார்த்தைகளில்

பக்கம் பக்கமாய் பேசும் கதைகள் உண்டு. ஒரே பக்கத்தில் எழுதப்படும் கதைகளும் உணடு. ஆனால் ஒரு சில வார்த்தைகளிலும் கதை சொல்லலாம். [எழுத்தாளர் சுஜாதா சில ஆண்டுகளுக்கு முன் இதைப்பற்றி எழுதியதாய் ஞாபகம்]

என்னை வசித்த ஒரு கதை Ernest Hemingway எழுதியது.
"விற்பனைக்கு: குழந்தையின் செருப்புகள், உபயோகப்படுத்தப் படாதவை."
[For sale: baby shoes, never worn] ஒரே வரியில் மனதை உருகச்செய்யும். இது உலகப்புகழ் பெற்ற வரிகளாய் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை.

உலகளவில் பிரபலமான மற்றொரு கதை,
"அவன் கண் விழித்த போது டைனோசர் இன்னும் அங்கிருந்தது"
"When he woke up, the dinosaur was still there" எழுதியது Augusto Monterroso.

நான் ரசித்த அறிவியல் புனைவு [Science Fiction-ஐ இப்படித்தானே கூறுவார்கள்] கதை இதோ: "அன்றைய தினம் சூரியன் மேற்கே உதித்தது"
"That morning the sun rose in the west" இதை எழுதியது Anthony Burgess.

திகில் கதையை பொறுத்த வரையில் எனக்குப் பிடித்தது இது,
"உலகின் கடைசி மனிதன் அறையில் அமர்ந்திருந்தான். அறைக்கதவு தட்டப்பட்டது".
"The last man on Earth sat alone in a room. There was a knock on the door..." இதை எழுதியது Fredric Brown.

ஒரு மசாலா கதை, "கடவுளே! நான் கர்ப்பம்!! யார் காரணம்"
"Good God, I'm pregnant, I wonder who did it" எழுதியது யாரென்று தெரியவில்லை.

இதையெல்லாம் சொல்லி நம் பங்கு என்று எதுவும் வேண்டாமா?
"ஒழிந்தான் கடவுள்"


கதிர்கா கவிதைகள் [2]

இலாபம்
யார் சொன்னது பங்குச்சந்தையே  இலாபமானது என்று?
வாக்காளர் அட்டை அடக்க விலை நூறு ரூபாய்.
ஒவ்வொரு தேர்தலிலும் சந்தை விலை
ஐநூறு முதல் ஆயிரம் வரை.
இந்தியா வளர்கிறது!


லஞ்ச லைசன்ஸ்
எட்டு போட்டேன் கிடைக்கவில்லை,
பிச்சை  போட்டேன் கிடைத்தது.

வரதட்சணை
கட்டிய சேலையுடன் வா!
பட்டு புடவைகளை பெட்டியில்
எடுத்துவா கசங்கிவிடும்!!

அருங்காட்சியகம்
அடர்ந்த மரங்கள்,
பச்சை புல்வெளி,
சில்லென்ற காற்று,
அழகிய சூழல்,
கூண்டுக்குள் கிளி.


எந்திரன் அமெரிக்காவில் நாளை ரிலீஸ்

ஆச்சரியம்!!! ஆனால் உண்மையா?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளை நிறுவனமான பிக சினிமாஸ் இணையத்தளத்தில் இத்தகவல் உள்ளது. நாளை (9/23/10) வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அதன் வெர்ஜினியா திரையரங்கில் எந்திரன் திரையிடப்படுவதாக உள்ளது.

இந்தியாவிலேயே அடுத்த வாரம் வெளியாவதாக செய்திகள் வந்துள்ள நிலையில் அமெரிக்காவில் நாளை திரையிடப்படுவதாக உள்ள செய்தி ஆச்சரியம் தானே!!!

இதே செய்தியை அமெரிக்காவில் பிரபலமான movietickets.com  இணையத்தளமும் உறுதி செய்கிறது.

கலைஞரிடமிருந்தோ ஒபாமாவிடமிருந்தோ வாழ்த்துச் செய்தி எதுவும் வெளியாகத்தால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லையென நினைக்கிறேன்.பிட் நோட்டீஸ் - 9/22

சின்னஞ்சிறு கதை "Management Short Story"
ஒரு காகம் மரத்தின் உச்சியில் நகராமல் எட்டு மணி நேரம் அமர்ந்து இருந்தது. அதைக் கண்ட முயல் ஒன்று எப்படி ஒன்றுமே செய்யாமல் உன்னால இருக்க முடியுது அப்படின்னு கேட்டதாம்.

அதற்கு அந்த காகம், 'அது ரொம்ப ஈசி.. கண்ண முழிச்சுக்கிட்டே தூங்க கத்துக்கணும்.. எதுக்கும் ரொம்ப Strain பண்ண கூடாது..'. அதைக் கேட்ட முயல் மரத்தடியில் தானும் உட்கார்ந்தது. ஒருசில மணி நேரங்களில் அந்தப்பக்கம் வந்த ஒரு நரி அசையாமல் உட்கார்ந்து இருந்த முயலை ஒரே நிமிடத்தில் அடித்துத் தின்றது.

கதையின் நீதி - "எந்த வேலையும செய்யாமல் இருக்க நீ உயர்ந்த Position-ல் இருந்தால் மட்டுமே முடியும்"

[எங்கோ படித்தது]
----------------------------------------------------------------------------------
நான் ரசித்த ஹைக்கூ -
வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழந்தை
வேறு பக்கம் பறக்க மாட்டாயா
[நன்றி: மாலன் நாராயணன்]
----------------------------------------------------------------------------------


கதிர்கா கவிதைகள் [1]

மனைவியின் மரணம்
நான் வாழும் வீட்டில் என்னை சேர்த்து ஆறு பேர்.
மகன், மருமகள், பேரன், பேத்திகள்.
நான் மட்டும் தனியே!!!

கற்பனை
குருவிகளின் சத்தம்,
வண்டுகளின் ரீங்காரம்,
அனைத்தும் சுவைக்கிறேன்
கவிதைகளில் மட்டும்.

முரண்
'சோ' என பெய்யும் மழை...
மகிழ்ச்சியில் மலைவாழ் மரங்கள்,
நான் மட்டும் பழித்தேன்....
என் மலைச்சுற்றுலா தடைப்பட்டதென்று!!!

கணக்கு
ஒன்றும் ஒன்றும் இணைந்து மூன்றானால் கல்யாணக் கணக்கு!
ஒன்றும் ஒன்றும் இணைந்து ஒன்றானால் காதல் கணக்கு!
ஒன்றும் ஒன்றும் இணைந்து இல்லாமல் போனோமே சாதிக் கணக்கால்!!!


முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.