தீபாவளி மலர் - மின்னிதழ்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



இருளை நீக்குவது

தீபம் மட்டுமல்ல

நட்பும் கூடத்தான்!

தீபாவளி வாழ்த்துக்கள்!!


ஜோக்
'இந்த வெடிக்கு பேரு ஆற்காடு வீராசாமி வெடியா.. ஏங்க?

'இந்த வெடிய எந்த பக்கம் வைச்சு வெடிச்சாலும் நேரா கரண்டு கம்பத்துல போயி வெடிச்சு அந்த தெருவுக்கே கரண்டு இல்லாம பண்ணிடுங்க!!'

- கதிர்கா



படித்ததில் பிடித்து (கவிதை)
ஒரேயொரு
முறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று
உன் முகத்தை ஏற்றிய
சந்தோசத்தில் விளக்குகள்
தீபாவளி கொண்டாடட்டுமே
- யாழ் அகத்தியன்

தீபாவளிக்கு எத்தன நாள் இருக்கு? - சிறுகதை
அன்றைக்கு அவர்கள் பொழுது சந்தோஷத்துடன் விடிந்தது. அவர்கள் என்று இங்கு குறிப்பிடப்படுபவர்கள், சாந்தி, அவள் அக்கா மற்றும் அவளின் பெற்றோர்.

'அக்கா, இன்னும் எத்தன நாள் இருக்கு, தீபாவளி வர?'

'இன்னும் இருபது நாள் இருக்குடி'

'இருபது நாள் இருக்கா..?' என்று சாந்தி முகத்தில் சந்தோஷம் காட்டினாள்

'அப்பா எனக்கு ஒரு புது டிரஸ் வேணும்பா?' என்று அப்பாவை கொஞ்சிக்கொண்டே கேட்டாள்

'அதுக்கென்னடா, என் குட்டிம்மாவுக்கு வாங்காம, யாருக்கு வாங்கப்போறேன்'

இதை பார்த்தும் பார்க்காத்து போல் அம்மா சமையல் அறை என்று வகைப்படுத்த முடியாத அந்த இடுக்கில் நின்று சமைத்து கொண்டிருந்தாள்

சிறிது நேரத்தில் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு சென்றுவிட சாந்தி அக்காவுடன் பள்ளிக்கு செல்ல தயாரானாள்.

சாந்திக்கு புது டிரஸ், புது பென்சில், புது ஸ்கூல் பை என்று விதம்விதமாய் கிடைத்த ஜோரில் சில தினங்கள் கழிந்தது.

****
'அக்கா, இன்னும் எத்தன நாள் இருக்கு, தீபாவளி வர?'

'இன்னும் பத்து நாள் இருக்குடி' அக்கா சிறிது நேரம் கணக்கு பார்த்து கூறினாள்.

'இன்னும் பத்து நாள்தான் இருக்கா..?' சாந்தி முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது.

'அப்பா இன்னைக்கு நம்ம தெருமுக்குல இருக்குற பரோட்டா கடைல இருந்து பரோட்டா வாங்கிட்டு வர்றீயா?'

'ஆமா, அது ஒண்ணுதான் குறைச்சல்' அம்மா இவளை திட்டிக்கொண்டே சமையலில் இருந்தாள்

'ஏய், ஏன் பொண்ண வையுற... என்ன கேட்டுட்டா பரோட்டாதான கேட்டா. நாம என்ன தினமுமா திங்குறோம். ஏதோ ஆசைப்பட்டு கேக்குறா? சும்மா இரு... நான் வாங்கிட்டு வர்றேன்டா கண்ணா'

****

'அக்கா, இன்னும் எத்தன நாள் இருக்கு, தீபாவளி வர?'

'இன்னும் அஞசு நாள் இருக்குடி' அக்கா இந்த முறை கணக்கெல்லாம் பார்க்காமல் உடனடியாக பதில் கூறினாள்

'இன்னும் அஞசு நாள்தான் இருக்கா..?' சாந்தி ஐந்து விரல்களை எண்ணிப்பார்த்தாள். எண்ணி முடித்தவுடன் முகத்தில் கவலைகள் சூழ்ந்தன


'இன்னைக்கு என்னடா வாங்கிட்டு வர்ற?' அப்பா சாந்தியிடம் கேட்டார்

'ஒண்ணும் வேணாம்பா?'

'ஏன்டா குட்டிம்மா? முறுக்கும் பனியாரமும் பிடிக்கும்ல உனக்கு. ரெண்டும் வாங்கிட்டு வர்றேன்'

'சரிப்பா'

அப்பா வேலைக்கு போன பிறகும் ஐந்து விரல்களை கொண்டு தீபாவளிக்கு நாட்களை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

****

'அக்கா, நாளான்னைக்கு தீபாவளில்ல...?'

'ஆமாண்டி, இதையே எத்தன தடவ கேட்ப?'


'சாந்தி  உடம்பு கிடம்பு சரியில்லையா.. ஏன் ஒரு மாதிரி இருக்க?' அம்மா கேட்டாள்

'ஒண்ணும் இல்லம்மா..நல்லாதான் இருக்கேன்'

'என்னங்க வரும்போது இவளுக்கு புது ரிப்பன் செட்டும் வளவியும் வாங்கிட்டு வாங்க.. சரியா?' அம்மா இவளை பார்த்துக்கொண்டே அப்பாவிடம் கூறினாள்

****
நாளை தீபாவளி.. ஊரே பட்டாசில் கறையாகி கொண்டிருந்தது.

சாந்தி வீட்டுக்கதவு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு என்று அப்பா கொடுத்த கம்பி மத்தாப்பு பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. அக்கா பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.


'அப்பா எப்பம்மா வரும்?'

'உனக்கென்ன தெரியாதா.. நாளைக்கு காலைல்லதான் வரும்'

'அந்த முதலாளி அதுக்கப்புறம் பட்டாசுக்கடைய அடுத்த வருஷம்தான் திறப்பாராம்மா?'

'ஆமா.. என்ன பண்ணுறது.. நம்ம தலையெழுத்து அப்படி. ஒரு காலும் கையும் விளங்காம போன மனுஷனுக்கு பழகுன தோஷத்துக்கு அந்த முதலாளியாச்சும் வருஷத்துக்கொரு தடவ வேல தர்றாரு. மிச்ச நேரம் எல்லாம் இந்த பேனா செட்ட வச்சுக்கிட்டு பஸ் ஸ்டாப்ல வித்து உங்கப்பா ஒரு காசு சம்பாதிக்க முடியல? என் சம்பாத்தியத்துல கால் வயிறு நிறைஞ்சாலே பெரிசுதான். போ.. போயி அந்த பட்டாச கொளுத்து போ.. '


நேராக அக்காவிடம் சென்றாள்.
'அக்கா அடுத்த வருஷம் தீபாவளி எப்பக்கா வரும்'

'ஆரம்பிச்சுட்டயா? அதுக்கு இன்னும் மூன்னூத்தி எழுபது நாள் இருக்கு..'


சாந்தி அப்பாவுக்காகவும் அடுத்த தீபாவளிக்காகவும் காத்திருக்க ஆரம்பித்தாள்.

- கதிர்கா

ஜோக்

"தீபாவளி அதுவுமா ஏன்டா அந்த தியேட்டருல மட்டும் கூட்டமே இல்ல?"

"கவர்மெண்டு சொன்ன விலைக்கே டிக்கட்டு விக்குறாங்களாம். அதனால படம் ப்ளாப் ஆயிடுச்சு போலன்னு யாரும் போக மாட்டேங்குறாங்க"

- கதிர்கா

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



இனமும்
மொழியும்

இனியாவது
இன்புறட்டும்

இறைவனே
அருள்புரிவாய்..

இனிய தீபாவளி
வாழ்த்துக்கள்!


பாட்டியின் தீபாவளி - சிறுகதை (புதுமைப்பித்தன்)
'குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.'

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத் தவிக்கவிட்டுத் திடீரென்று போய்விட்டாளே.

அதன் பிறகு...

அதன் பிறகென்ன? கிழவிக்கு நாட்கள் சென்றது தெரியாது. யோகிகள் காலம் கடந்துவிடுகிறார்கள். காலத்தின் மாறுபாடுகளை மீறி மோன நிலையில் இருந்துவிடுகிறார்களாம். அது எனக்குத் தெரியாது. சங்கரிப் பாட்டிக்கு நாட்கள் கழிந்தது தெரியாது. நடைப்பிணம்... நடையற்ற பிணமாக இருந்தாலும் தேவலை.

அன்று விடியற்காலம் தீபாவளி ஆரம்பிக்கிறது. சாயங்காலம் முதல் கிழவிக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. கிழக்கட்டைக்குத் தீபாவளி வேறு வேண்டியாக்கும். மடிசஞ்சி மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். இரவு பூராவாகவும் துக்கம்... தூக்கமாவது மண்ணாவது!

விளக்கையாவது ஏற்றி வைக்கலாமே. கிழவி குடுகுடுவென்று நடுங்கியவண்ணம் எழுந்திருக்கிறாள். என்ன நேரம் என்று தெரியாது. வெளி எல்லாம் இருள், உள் எல்லாம் இருள். உள்ளத்திலும் இருள். எங்கோ தூரத்திலே பேச்சுக் குரல்... அர்த்தமற்ற மனிதக் குரல் அவள் காதைக் குத்துகிறது.

நெருப்புக் குச்சியைக் கிழித்து குத்துவிளக்கை ஏற்றுகிறாள். குச்சிதான் சீக்கிரம் பிடிக்கிறதா? நனைந்த தீப்பெட்டி. அடுப்பண்டை போகிறாள். குவிந்த சாம்பலில் மங்கி மடியும் கங்கு. அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள். விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன. அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும் பம்முகின்ற இருளையும் அசைந்தாடச் செய்கின்றன.

பாட்டிக் கிழவிக்கு மீனுவின் நினைவு உள்ளத்தைக் கவ்வியது நெஞ்சையடைத்தது. போன தீபாவளிக்கு முந்திய தீபாவளியில் அவள் கைக்குழந்தையாக, தவழும் குழந்தையாக செல்லத்தின் மடியில் சிரித்துக்கொண்டிருக்கும்போது தைத்த சட்டை, பாட்டியின் மடிசஞ்சி மூட்டையிலே, பரிசுத்தமான விபூதிச் சம்புடத்துடனும், ருத்திராட்சத்துடனும் இருந்தது. அதை மெதுவாக எடுத்து (மங்கிய கண்களின் கண்ணீர் அதை நனைக்கிறது) மீனு என்று குழறிக்கொண்டு, குத்துவிளக்கின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்குகிறாள். கிழவியின் பொக்கை வாயில் ஒரு பரிதாபமான சிரிப்பு. பட்டுச் சட்டையில் இரண்டு துளிகள்.

பாட்டி குத்துவிளக்கின் பாதத்தில், பட்டுச் சட்டையில் முகம் வைத்து, வணங்குகிறாள். உள்ளம் 'மீனு, மீனு' என்று ஒலி செய்கிறது.

ஏன் அப்படியே சிலையாக, குத்துவிளக்காக இருந்துவிட்டாள். உயிர்தான்...

"பாட்டி!"

குழந்தைக் குரல்... குழந்தை மீனுவின்...

கிழவி திரும்புகிறாள்.

"வாடியம்மா! கோந்தே... வாடியம்மா!"

ஆவலுடன் கையை நீட்டுகிறாள்.

"மாத்தேன் போ!" குழந்தை சிரிக்கிறது. ஆனால் கைகளைப் போட்டுத் தாவுகிறது. குழந்தை அவள் வற்றிய நெஞ்சில் தாவுகிறது. அப்பா! பால் வார்த்த மாதிரி... என்ன சுகம்!

"பாட்டி! பாட்டி!" என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து குமைகிறது.

"பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?"

"வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?"

குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.

"பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். நான் தான் பொண்ணாம். வச்சு விளையாடலாமா!"

குழந்தைக்குச் சட்டைப்போட்டுக் குத்துவிளக்கின் முன்பு மரப்பாச்சியுடன் உட்கார வைத்தாகிவிட்டது. கிழவி சோபனப் பாட்டு தனது நாதமிழந்து நடுங்கும் குரலில் பாடுகிறாள்.

"பாட்டி, கதை சொல்லு பாட்டி... அன்னிக்குச் சொன்னையே, அந்தக் கதை சொல்லு பாட்டி... நன்னா... நாந்தான் இப்படி மடிலே உக்காந்துப்பேனாம்..." மறுபடியும் குழந்தை மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆடி ஆடி அசைந்து கொண்டு கேட்கிறது.

"நரகாசுரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம். எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடுபடுத்தினானாம்..."

"நான் படுத்துவேன்பியே அது மாதிரியா?"

"அடி கண்ணே உம்மாதிரி யார் சமத்தாட்டம் படுத்துவா?" குழந்தையைத் தழுவி முத்தம் கொஞ்சுகிறாள். "அவன் பொல்லாதவன்... அவனை கிருஷ்ணன் வந்து அம்பாலே - வில்லாலே..."

"அம்புன்னா என்ன பாட்டீ!"

"அம்புன்னா..."

"பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!"

கிழவி பாடுகிறாள்.

"பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா - நின்றன் ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா"

"பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?"

"சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்."

குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள் திரையை நோக்கி ஓடுகிறது. கிழவியும் தள்ளாடிக் கொண்டு பின் தொடர்கிறாள்.

குழந்தை வாசலை நெருங்கிவிட்டது.

வெளியிலே 'டபார்' என்று ஓர் யானை வெடிச் சப்தம்.

அவ்வளவுதான்.

உலகத்திற்கு தீபாவளி ஆரம்பித்தது.

பாட்டிக்கு...?


(புதுமைப்பித்தன் எழுதியது, ஊழியன், 09-11-1934)


கவிதை
                             சரவெடி

சிதறிக்கிடக்கும்
ஆயிரம் ரூபாய் சரவெடியில்

வெடிக்காமல் கிடக்கும்
வெடியைத் தேடுகிறாள்

குப்பை அள்ளும் சிறுமி!

- கதிர்கா

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



பட்டாசுகள்
புத்தாடைகள்

புதுப்படங்கள்
இவைகளுடன்

பண்பாடும்
தளைக்கட்டும்!


தீபாவளி கலாச்சாரம் தெரியாத பசங்க - ஆராய்ச்சி கட்டுரை
தீபாவளி பத்தி ஏதாவது புதுசா தேறுதான்னு பார்க்க விக்கிபிடியா பக்கம் போனேன்.

யாரோ வட நாட்டுக்காரங்க எழுதியிருக்காங்க போல. என்ன சொல்லுறாங்கன்னா, தீபாவளிய தமிழர்கள் முக்கிய பண்டிகையா கருதவதில்லை அப்படின்னு இருக்கு (இங்கே). என்னங்கய்யா அநிநாயமா இருக்கு?

ஐநாறு ரூபா பஸ் டிக்கட்ட ஆயிரத்தைநூறு ரூபா கொடுத்தாவது ஊருக்கு போறோம்.

தெருவெல்லாம் குப்பையாக்கி காசை கரியாக்கி காதை செவிடாக்கி சரவெடி வெடிக்குறோம்.

தீபாவளிக்கு தலைவரு படம் வரலைன்னா தீக்குளிக்குற அளவுக்கு தீபாவளிக்கும் தலைவருக்கும் ரசிகரா இருக்குறோம்.

காலையில இருந்த நைட் வரைக்கும் சினிமா நடிகைங்க தீபாவளிக்கு என்ன சொல்லுறாங்கன்னு விடாம டிவி பார்க்குறோம்.

விடிய விடிய சரக்குக்கடையிலேயே குடியிருக்குறோம்.
 (இதை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை தனியே)

சினிமா பாட்டு மிஞ்சி நிப்பது கருத்தா குத்தான்னு ஆராய்ச்சி பண்ண பட்டிமன்றம் பார்க்குறோம்.

பல்லு போனாலும் சரி, சுகர் வந்தாலும் சரின்னு தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே ஸ்வீட்டும் பலகாரமும் சாப்பிடுறோம்.

ஒண்ணு வாங்குனா ரெண்டு இலவசம்னு யாரு கொடுக்குறான்னு தேடிப்பிடிச்சு டிரஸ் வாங்குறோம்.

இந்த மாதிரி ஸ்பெசல் பதிவெல்லாம் போடுறோம்.

இவ்வளவும் பண்ணுற நம்மள பத்தி நமக்கு தீபாவளி முக்கிய பண்டிகை இல்லைன்னு  தரக்குறைவா எழுதியிருக்காங்க. நம்ம கலாச்சாரம் தெரியாத பசங்க!!

படித்ததில் பிடித்து (கவிதை)

பசியில் கதறும் குஞ்சுகள்

உணவோடு தவிக்கும் தாய்பறவை

விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.

- பொன்.சுதா


ஜோக்

'ஏன்டா தீபாவளி ரிலீஸூக்கு நமீதா கட்-அவட்டுக்கு பக்கதுல்ல தமிழகம் காத்தவரேன்னு யாரோ ஒருத்தரோட கட்-அவுட்ட வச்சிருக்காங்க?'

'போன வாரம் யாரோ நம்ம நமீதாவ கடத்த முயற்சி பண்ணுனப்ப அவருதான் காப்பாத்துனாராம். அதுக்காக அவருக்கு நமீதா கிளைச்சங்கம் அமைச்சு கட்-அவட்டும் வச்சுட்டாங்க'

- கதிர்கா


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


திகட்டாத
செல்வமும்

தீங்கறியா
மனமும்

தித்திக்கும்
மகிழ்ச்சியும்

தரட்டுமே
இந்த தீபாவளி



தீபாவளியும் அரசாங்கத்தின் அக்கறையும் - சிறப்புக் கட்டுரை
தீபாவளிய முன்னிட்டு ரொம்ப பேர் பயணம் செய்வாங்க.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப டிராஃபிக் ஆகும்.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப  தீ விபத்து ஏற்படும்.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப  ரவுடிங்க தொல்லைங்க இருக்கும்.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப   சரக்கு தட்டுப்பாடு வந்திரும்.. என்ன செய்யலாம்.

அய்யய்யோ!! உடனே கலெக்டர கூப்பிட்டு மீட்டிங்க போடு!!

இப்ப தெரிஞ்சிருக்குமே மேலே சொன்ன டயலாக் எல்லாம் யாரு சொல்லி இருப்பாங்கன்னு. ஆமாங்க.. அரசாங்கம்தான்.

அவங்க எடுத்த முடிவுப்படி இந்த தீபாவளி சீசன்ல எந்த குடிமகனும் கஷ்டப்படக்கூடாதுன்னு எப்பவுமே தீராதவண்ணம் ஏகப்பட்ட சரக்க ஸ்டாக் பண்ணி வைச்சிருக்காங்களாம். (இங்கே)

இதுக்கு காரணம் இல்லாம இல்ல. கடந்த மூணு வருஷமா தீபாவளிக்கு நம்ம குடிமகனுங்க டாஸ்மார்க்க பாஸ்மார்க் எடுக்க வைச்சிருக்காங்கல்ல. தீபாவளி சீசன்ல மட்டும் நம்மாளுங்களால டாஸ்மார்க் சம்பாதிச்சது இவ்வளவு..

2007 - 60 கோடி சரக்கு விற்பனை

2008 - 200 கோடி சரக்கு விற்பனை

2009 - 230  கோடி சரக்கு விற்பனை

இந்த நிலைமைல அரசாங்கம் இந்த வருஷ வருமானத்த விடுமா. இத வச்சு தான நமக்கு எல்லாம் அடுத்து இலவச கேபிள் டிவி கொடுக்க முடியும்.

டாஸ்மார்க்கோட மொத்த வருமானம் விலைவாசிக்கு போட்டியா கூடிகிட்டேதான் போகுது.

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. நம்ம ரேஷன் கடைல சாமான் எல்லாம் என்ன விலைன்னு நமக்கு அங்க போனாத்தான் தெரியும். ஆனா குடிமகனுங்க நலனுக்காக எல்லா சரக்கோட விலையையும் அரசாங்க இணையத்தளத்துலேயே வெளியிட்டு இருக்காங்க. என்ன ஒரு சேவை மனப்பான்மை (இங்கே).

அதோட முக்கியமான இன்னொரு சேவையும் செஞ்சிருக்காங்க. அதே இணையத்தளத்துல புதுசா குடிக்க ஆரம்பிக்கறவங்களுக்காக எல்லா சரக்கோட பேரு அதன் ஸ்பசாலிட்டி அதன் ஹிஸ்டரி ஜியாகரபி எல்லாம் லிஸ்ட் வேற பண்ணி வைச்சிருக்காங்க (இங்கே). அரசாங்கத்தோட சேவைக்கு அளவே இல்லைங்க.. புல்லரிக்குது.

வாழ்க அரசாங்கம்!
வளர்க டாஸ்மார்க்!!


இதப்படிச்சுட்டு தண்ணி அடிக்க போறவங்க, நிதானமா போங்க.. சரக்கு கண்டிப்பா தீராதுங்க.. ஆனா ஹவுஸ் ஃபுல் போர்டு போட்டுற போறாங்க.. பார்த்துப்போங்க!!

மெகா ஜோக்
நோ கமண்ட்ஸ் - ஒன்லி படம்


(கூகுளில் பார்த்தது)



வாழ்த்துக்கள்
மின்னும் ஒளிச்சுடர்
இன்னும் கொஞ்சம்
வெற்றியை தரட்டும்!
படபடக்கும் பட்டாசுகள்
பசி, பழி, பிணி,
போர்தனை பொசுக்கட்டும்!
இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்!!
 


முக்கிய குறிப்பு: பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லி, தமிழ்வெளி, தமிழ்மணம் ஆகியவற்றில் ஓட்டுப்போடுங்கள்.


7 comments:

Anonymous said...

அருமையான பதிவு. தீபாவளி வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்...அத்துனையும் அருமை.கலைஞர் பேனர் சிரிப்பு, ஆர்காடு வெடி சூப்பர்... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

கதிர்கா said...

நன்றி மதுரை சரவணன்

எஸ்.கே said...

தீபாவளி மலர் மிக நன்றாக உள்ளது!
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

hayyram said...

ஆர்காடு கரண்டு கம்பம் ஜோக் அருமை. உங்களுக்கும் எமது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராம்.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்

G VARADHARAJAN said...

சிறப்பான பதிவு அறிய முயற்சி பாராட்டுக்கள் இது போன்று பல இதழ்கள் பிறக்க வாழ்த்துக்கள்

அன்புடன்

ஜி வரதராஜன்
புதுக்கோட்டை