தீபாவளி மலர் - மின்னிதழ்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



இருளை நீக்குவது

தீபம் மட்டுமல்ல

நட்பும் கூடத்தான்!

தீபாவளி வாழ்த்துக்கள்!!


ஜோக்
'இந்த வெடிக்கு பேரு ஆற்காடு வீராசாமி வெடியா.. ஏங்க?

'இந்த வெடிய எந்த பக்கம் வைச்சு வெடிச்சாலும் நேரா கரண்டு கம்பத்துல போயி வெடிச்சு அந்த தெருவுக்கே கரண்டு இல்லாம பண்ணிடுங்க!!'

- கதிர்கா



படித்ததில் பிடித்து (கவிதை)
ஒரேயொரு
முறை
தலை நிமிர்ந்தபடி
விளக்கேற்று
உன் முகத்தை ஏற்றிய
சந்தோசத்தில் விளக்குகள்
தீபாவளி கொண்டாடட்டுமே
- யாழ் அகத்தியன்

தீபாவளிக்கு எத்தன நாள் இருக்கு? - சிறுகதை
அன்றைக்கு அவர்கள் பொழுது சந்தோஷத்துடன் விடிந்தது. அவர்கள் என்று இங்கு குறிப்பிடப்படுபவர்கள், சாந்தி, அவள் அக்கா மற்றும் அவளின் பெற்றோர்.

'அக்கா, இன்னும் எத்தன நாள் இருக்கு, தீபாவளி வர?'

'இன்னும் இருபது நாள் இருக்குடி'

'இருபது நாள் இருக்கா..?' என்று சாந்தி முகத்தில் சந்தோஷம் காட்டினாள்

'அப்பா எனக்கு ஒரு புது டிரஸ் வேணும்பா?' என்று அப்பாவை கொஞ்சிக்கொண்டே கேட்டாள்

'அதுக்கென்னடா, என் குட்டிம்மாவுக்கு வாங்காம, யாருக்கு வாங்கப்போறேன்'

இதை பார்த்தும் பார்க்காத்து போல் அம்மா சமையல் அறை என்று வகைப்படுத்த முடியாத அந்த இடுக்கில் நின்று சமைத்து கொண்டிருந்தாள்

சிறிது நேரத்தில் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு சென்றுவிட சாந்தி அக்காவுடன் பள்ளிக்கு செல்ல தயாரானாள்.

சாந்திக்கு புது டிரஸ், புது பென்சில், புது ஸ்கூல் பை என்று விதம்விதமாய் கிடைத்த ஜோரில் சில தினங்கள் கழிந்தது.

****
'அக்கா, இன்னும் எத்தன நாள் இருக்கு, தீபாவளி வர?'

'இன்னும் பத்து நாள் இருக்குடி' அக்கா சிறிது நேரம் கணக்கு பார்த்து கூறினாள்.

'இன்னும் பத்து நாள்தான் இருக்கா..?' சாந்தி முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது.

'அப்பா இன்னைக்கு நம்ம தெருமுக்குல இருக்குற பரோட்டா கடைல இருந்து பரோட்டா வாங்கிட்டு வர்றீயா?'

'ஆமா, அது ஒண்ணுதான் குறைச்சல்' அம்மா இவளை திட்டிக்கொண்டே சமையலில் இருந்தாள்

'ஏய், ஏன் பொண்ண வையுற... என்ன கேட்டுட்டா பரோட்டாதான கேட்டா. நாம என்ன தினமுமா திங்குறோம். ஏதோ ஆசைப்பட்டு கேக்குறா? சும்மா இரு... நான் வாங்கிட்டு வர்றேன்டா கண்ணா'

****

'அக்கா, இன்னும் எத்தன நாள் இருக்கு, தீபாவளி வர?'

'இன்னும் அஞசு நாள் இருக்குடி' அக்கா இந்த முறை கணக்கெல்லாம் பார்க்காமல் உடனடியாக பதில் கூறினாள்

'இன்னும் அஞசு நாள்தான் இருக்கா..?' சாந்தி ஐந்து விரல்களை எண்ணிப்பார்த்தாள். எண்ணி முடித்தவுடன் முகத்தில் கவலைகள் சூழ்ந்தன


'இன்னைக்கு என்னடா வாங்கிட்டு வர்ற?' அப்பா சாந்தியிடம் கேட்டார்

'ஒண்ணும் வேணாம்பா?'

'ஏன்டா குட்டிம்மா? முறுக்கும் பனியாரமும் பிடிக்கும்ல உனக்கு. ரெண்டும் வாங்கிட்டு வர்றேன்'

'சரிப்பா'

அப்பா வேலைக்கு போன பிறகும் ஐந்து விரல்களை கொண்டு தீபாவளிக்கு நாட்களை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

****

'அக்கா, நாளான்னைக்கு தீபாவளில்ல...?'

'ஆமாண்டி, இதையே எத்தன தடவ கேட்ப?'


'சாந்தி  உடம்பு கிடம்பு சரியில்லையா.. ஏன் ஒரு மாதிரி இருக்க?' அம்மா கேட்டாள்

'ஒண்ணும் இல்லம்மா..நல்லாதான் இருக்கேன்'

'என்னங்க வரும்போது இவளுக்கு புது ரிப்பன் செட்டும் வளவியும் வாங்கிட்டு வாங்க.. சரியா?' அம்மா இவளை பார்த்துக்கொண்டே அப்பாவிடம் கூறினாள்

****
நாளை தீபாவளி.. ஊரே பட்டாசில் கறையாகி கொண்டிருந்தது.

சாந்தி வீட்டுக்கதவு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு என்று அப்பா கொடுத்த கம்பி மத்தாப்பு பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. அக்கா பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.


'அப்பா எப்பம்மா வரும்?'

'உனக்கென்ன தெரியாதா.. நாளைக்கு காலைல்லதான் வரும்'

'அந்த முதலாளி அதுக்கப்புறம் பட்டாசுக்கடைய அடுத்த வருஷம்தான் திறப்பாராம்மா?'

'ஆமா.. என்ன பண்ணுறது.. நம்ம தலையெழுத்து அப்படி. ஒரு காலும் கையும் விளங்காம போன மனுஷனுக்கு பழகுன தோஷத்துக்கு அந்த முதலாளியாச்சும் வருஷத்துக்கொரு தடவ வேல தர்றாரு. மிச்ச நேரம் எல்லாம் இந்த பேனா செட்ட வச்சுக்கிட்டு பஸ் ஸ்டாப்ல வித்து உங்கப்பா ஒரு காசு சம்பாதிக்க முடியல? என் சம்பாத்தியத்துல கால் வயிறு நிறைஞ்சாலே பெரிசுதான். போ.. போயி அந்த பட்டாச கொளுத்து போ.. '


நேராக அக்காவிடம் சென்றாள்.
'அக்கா அடுத்த வருஷம் தீபாவளி எப்பக்கா வரும்'

'ஆரம்பிச்சுட்டயா? அதுக்கு இன்னும் மூன்னூத்தி எழுபது நாள் இருக்கு..'


சாந்தி அப்பாவுக்காகவும் அடுத்த தீபாவளிக்காகவும் காத்திருக்க ஆரம்பித்தாள்.

- கதிர்கா

ஜோக்

"தீபாவளி அதுவுமா ஏன்டா அந்த தியேட்டருல மட்டும் கூட்டமே இல்ல?"

"கவர்மெண்டு சொன்ன விலைக்கே டிக்கட்டு விக்குறாங்களாம். அதனால படம் ப்ளாப் ஆயிடுச்சு போலன்னு யாரும் போக மாட்டேங்குறாங்க"

- கதிர்கா

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



இனமும்
மொழியும்

இனியாவது
இன்புறட்டும்

இறைவனே
அருள்புரிவாய்..

இனிய தீபாவளி
வாழ்த்துக்கள்!


பாட்டியின் தீபாவளி - சிறுகதை (புதுமைப்பித்தன்)
'குத்து விளக்கேற்றி கோலமிட்டு பாரேனோ.'

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியின் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹுஷகன் நிலைமை மாதிரி. அவள் வாழ்க்கை சுகமான கவலையற்ற முடிவை எதிர்நோக்கித் தன் பிள்ளை, மாட்டுப்பெண், குழந்தை மீனு இவர்கள் இடையில் கழிந்து வந்தது. திடீரென்று சென்ற ஐப்பசியில், அந்தக் கண்ணற்ற விதி எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய்விட்டது. காலராவிற்குத் தராதரம் தெரிகிறதா? அந்தக் குழந்தை, குழந்தை மீனு, அவள் என்ன பாபம் செய்தாள். கிழக்கட்டையைத் தவிக்கவிட்டுத் திடீரென்று போய்விட்டாளே.

அதன் பிறகு...

அதன் பிறகென்ன? கிழவிக்கு நாட்கள் சென்றது தெரியாது. யோகிகள் காலம் கடந்துவிடுகிறார்கள். காலத்தின் மாறுபாடுகளை மீறி மோன நிலையில் இருந்துவிடுகிறார்களாம். அது எனக்குத் தெரியாது. சங்கரிப் பாட்டிக்கு நாட்கள் கழிந்தது தெரியாது. நடைப்பிணம்... நடையற்ற பிணமாக இருந்தாலும் தேவலை.

அன்று விடியற்காலம் தீபாவளி ஆரம்பிக்கிறது. சாயங்காலம் முதல் கிழவிக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. கிழக்கட்டைக்குத் தீபாவளி வேறு வேண்டியாக்கும். மடிசஞ்சி மூட்டையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். இரவு பூராவாகவும் துக்கம்... தூக்கமாவது மண்ணாவது!

விளக்கையாவது ஏற்றி வைக்கலாமே. கிழவி குடுகுடுவென்று நடுங்கியவண்ணம் எழுந்திருக்கிறாள். என்ன நேரம் என்று தெரியாது. வெளி எல்லாம் இருள், உள் எல்லாம் இருள். உள்ளத்திலும் இருள். எங்கோ தூரத்திலே பேச்சுக் குரல்... அர்த்தமற்ற மனிதக் குரல் அவள் காதைக் குத்துகிறது.

நெருப்புக் குச்சியைக் கிழித்து குத்துவிளக்கை ஏற்றுகிறாள். குச்சிதான் சீக்கிரம் பிடிக்கிறதா? நனைந்த தீப்பெட்டி. அடுப்பண்டை போகிறாள். குவிந்த சாம்பலில் மங்கி மடியும் கங்கு. அதைக் கரண்டியில் கொண்டுவந்து அதன் உதவியால் நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து விளக்கை ஏற்றுகிறாள். விளக்கின் மங்கிய தீப ஒளி, குச்சிலில் இருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களைப் பேய் சாயையாகக் காண்பிக்கின்றன. அசைந்தாடும் தீபவொளி பொருள்களை அசைக்கின்றன. மூலையிலும் மோட்டிலும் பம்முகின்ற இருளையும் அசைந்தாடச் செய்கின்றன.

பாட்டிக் கிழவிக்கு மீனுவின் நினைவு உள்ளத்தைக் கவ்வியது நெஞ்சையடைத்தது. போன தீபாவளிக்கு முந்திய தீபாவளியில் அவள் கைக்குழந்தையாக, தவழும் குழந்தையாக செல்லத்தின் மடியில் சிரித்துக்கொண்டிருக்கும்போது தைத்த சட்டை, பாட்டியின் மடிசஞ்சி மூட்டையிலே, பரிசுத்தமான விபூதிச் சம்புடத்துடனும், ருத்திராட்சத்துடனும் இருந்தது. அதை மெதுவாக எடுத்து (மங்கிய கண்களின் கண்ணீர் அதை நனைக்கிறது) மீனு என்று குழறிக்கொண்டு, குத்துவிளக்கின் பாதத்தில் சமர்ப்பித்து வணங்குகிறாள். கிழவியின் பொக்கை வாயில் ஒரு பரிதாபமான சிரிப்பு. பட்டுச் சட்டையில் இரண்டு துளிகள்.

பாட்டி குத்துவிளக்கின் பாதத்தில், பட்டுச் சட்டையில் முகம் வைத்து, வணங்குகிறாள். உள்ளம் 'மீனு, மீனு' என்று ஒலி செய்கிறது.

ஏன் அப்படியே சிலையாக, குத்துவிளக்காக இருந்துவிட்டாள். உயிர்தான்...

"பாட்டி!"

குழந்தைக் குரல்... குழந்தை மீனுவின்...

கிழவி திரும்புகிறாள்.

"வாடியம்மா! கோந்தே... வாடியம்மா!"

ஆவலுடன் கையை நீட்டுகிறாள்.

"மாத்தேன் போ!" குழந்தை சிரிக்கிறது. ஆனால் கைகளைப் போட்டுத் தாவுகிறது. குழந்தை அவள் வற்றிய நெஞ்சில் தாவுகிறது. அப்பா! பால் வார்த்த மாதிரி... என்ன சுகம்!

"பாட்டி! பாட்டி!" என்று நெஞ்சில் குழைகிறது. நெஞ்சிடையே நெளிந்து, வளைந்து குமைகிறது.

"பாட்டி, பாப்பா வெச்சு விளையாடலாமா?"

"வாடியம்மா? மரப்பாச்சி எடுத்துண்டு வரட்டா?"

குழந்தையுடன் ஒரு மூலைப் பக்கம் திரும்புகிறாள். குழந்தை எட்டி ஒரு பொம்மையை எடுக்கிறது. கையொடிந்த மரப்பாச்சி.

"பாட்டி! நீதான் அம்பி மாமாவாம். நான் தான் பொண்ணாம். வச்சு விளையாடலாமா!"

குழந்தைக்குச் சட்டைப்போட்டுக் குத்துவிளக்கின் முன்பு மரப்பாச்சியுடன் உட்கார வைத்தாகிவிட்டது. கிழவி சோபனப் பாட்டு தனது நாதமிழந்து நடுங்கும் குரலில் பாடுகிறாள்.

"பாட்டி, கதை சொல்லு பாட்டி... அன்னிக்குச் சொன்னையே, அந்தக் கதை சொல்லு பாட்டி... நன்னா... நாந்தான் இப்படி மடிலே உக்காந்துப்பேனாம்..." மறுபடியும் குழந்தை மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஆடி ஆடி அசைந்து கொண்டு கேட்கிறது.

"நரகாசுரன்னு ஒத்தனாம். அவன் பொல்லாதவனாம். அக்ரமம் செய்தானாம். எல்லாரையும் அடிச்சு, குத்தி, பாடுபடுத்தினானாம்..."

"நான் படுத்துவேன்பியே அது மாதிரியா?"

"அடி கண்ணே உம்மாதிரி யார் சமத்தாட்டம் படுத்துவா?" குழந்தையைத் தழுவி முத்தம் கொஞ்சுகிறாள். "அவன் பொல்லாதவன்... அவனை கிருஷ்ணன் வந்து அம்பாலே - வில்லாலே..."

"அம்புன்னா என்ன பாட்டீ!"

"அம்புன்னா..."

"பாட்டீ ஒரு பாட்டு சொல்லு பாட்டீ!"

கிழவி பாடுகிறாள்.

"பார்க்குமிடத்திலெல்லாம் நந்தலாலா - நின்றன் ஆசை முகம் தோன்றுதடா நந்தலாலா"

"பாட்டீ நான் ஓடறேன் பிடிப்பையோ?"

"சமத்தாட்டம் ஓடு! பிடிக்கிறேன்."

குழந்தை குதித்துக்கொண்டு வாசல் பக்கம் ஓடுகிறது. வெளியில் இருக்கும் இருள் திரையை நோக்கி ஓடுகிறது. கிழவியும் தள்ளாடிக் கொண்டு பின் தொடர்கிறாள்.

குழந்தை வாசலை நெருங்கிவிட்டது.

வெளியிலே 'டபார்' என்று ஓர் யானை வெடிச் சப்தம்.

அவ்வளவுதான்.

உலகத்திற்கு தீபாவளி ஆரம்பித்தது.

பாட்டிக்கு...?


(புதுமைப்பித்தன் எழுதியது, ஊழியன், 09-11-1934)


கவிதை
                             சரவெடி

சிதறிக்கிடக்கும்
ஆயிரம் ரூபாய் சரவெடியில்

வெடிக்காமல் கிடக்கும்
வெடியைத் தேடுகிறாள்

குப்பை அள்ளும் சிறுமி!

- கதிர்கா

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



பட்டாசுகள்
புத்தாடைகள்

புதுப்படங்கள்
இவைகளுடன்

பண்பாடும்
தளைக்கட்டும்!


தீபாவளி கலாச்சாரம் தெரியாத பசங்க - ஆராய்ச்சி கட்டுரை
தீபாவளி பத்தி ஏதாவது புதுசா தேறுதான்னு பார்க்க விக்கிபிடியா பக்கம் போனேன்.

யாரோ வட நாட்டுக்காரங்க எழுதியிருக்காங்க போல. என்ன சொல்லுறாங்கன்னா, தீபாவளிய தமிழர்கள் முக்கிய பண்டிகையா கருதவதில்லை அப்படின்னு இருக்கு (இங்கே). என்னங்கய்யா அநிநாயமா இருக்கு?

ஐநாறு ரூபா பஸ் டிக்கட்ட ஆயிரத்தைநூறு ரூபா கொடுத்தாவது ஊருக்கு போறோம்.

தெருவெல்லாம் குப்பையாக்கி காசை கரியாக்கி காதை செவிடாக்கி சரவெடி வெடிக்குறோம்.

தீபாவளிக்கு தலைவரு படம் வரலைன்னா தீக்குளிக்குற அளவுக்கு தீபாவளிக்கும் தலைவருக்கும் ரசிகரா இருக்குறோம்.

காலையில இருந்த நைட் வரைக்கும் சினிமா நடிகைங்க தீபாவளிக்கு என்ன சொல்லுறாங்கன்னு விடாம டிவி பார்க்குறோம்.

விடிய விடிய சரக்குக்கடையிலேயே குடியிருக்குறோம்.
 (இதை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை தனியே)

சினிமா பாட்டு மிஞ்சி நிப்பது கருத்தா குத்தான்னு ஆராய்ச்சி பண்ண பட்டிமன்றம் பார்க்குறோம்.

பல்லு போனாலும் சரி, சுகர் வந்தாலும் சரின்னு தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே ஸ்வீட்டும் பலகாரமும் சாப்பிடுறோம்.

ஒண்ணு வாங்குனா ரெண்டு இலவசம்னு யாரு கொடுக்குறான்னு தேடிப்பிடிச்சு டிரஸ் வாங்குறோம்.

இந்த மாதிரி ஸ்பெசல் பதிவெல்லாம் போடுறோம்.

இவ்வளவும் பண்ணுற நம்மள பத்தி நமக்கு தீபாவளி முக்கிய பண்டிகை இல்லைன்னு  தரக்குறைவா எழுதியிருக்காங்க. நம்ம கலாச்சாரம் தெரியாத பசங்க!!

படித்ததில் பிடித்து (கவிதை)

பசியில் கதறும் குஞ்சுகள்

உணவோடு தவிக்கும் தாய்பறவை

விரட்டும் தீபாவளி வெடிச்சப்தம்.

- பொன்.சுதா


ஜோக்

'ஏன்டா தீபாவளி ரிலீஸூக்கு நமீதா கட்-அவட்டுக்கு பக்கதுல்ல தமிழகம் காத்தவரேன்னு யாரோ ஒருத்தரோட கட்-அவுட்ட வச்சிருக்காங்க?'

'போன வாரம் யாரோ நம்ம நமீதாவ கடத்த முயற்சி பண்ணுனப்ப அவருதான் காப்பாத்துனாராம். அதுக்காக அவருக்கு நமீதா கிளைச்சங்கம் அமைச்சு கட்-அவட்டும் வச்சுட்டாங்க'

- கதிர்கா


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


திகட்டாத
செல்வமும்

தீங்கறியா
மனமும்

தித்திக்கும்
மகிழ்ச்சியும்

தரட்டுமே
இந்த தீபாவளி



தீபாவளியும் அரசாங்கத்தின் அக்கறையும் - சிறப்புக் கட்டுரை
தீபாவளிய முன்னிட்டு ரொம்ப பேர் பயணம் செய்வாங்க.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப டிராஃபிக் ஆகும்.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப  தீ விபத்து ஏற்படும்.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப  ரவுடிங்க தொல்லைங்க இருக்கும்.. என்ன செய்யலாம். ப்ரீ விடு மாமு!!

தீபாவளிய முன்னிட்டு ரொம்ப   சரக்கு தட்டுப்பாடு வந்திரும்.. என்ன செய்யலாம்.

அய்யய்யோ!! உடனே கலெக்டர கூப்பிட்டு மீட்டிங்க போடு!!

இப்ப தெரிஞ்சிருக்குமே மேலே சொன்ன டயலாக் எல்லாம் யாரு சொல்லி இருப்பாங்கன்னு. ஆமாங்க.. அரசாங்கம்தான்.

அவங்க எடுத்த முடிவுப்படி இந்த தீபாவளி சீசன்ல எந்த குடிமகனும் கஷ்டப்படக்கூடாதுன்னு எப்பவுமே தீராதவண்ணம் ஏகப்பட்ட சரக்க ஸ்டாக் பண்ணி வைச்சிருக்காங்களாம். (இங்கே)

இதுக்கு காரணம் இல்லாம இல்ல. கடந்த மூணு வருஷமா தீபாவளிக்கு நம்ம குடிமகனுங்க டாஸ்மார்க்க பாஸ்மார்க் எடுக்க வைச்சிருக்காங்கல்ல. தீபாவளி சீசன்ல மட்டும் நம்மாளுங்களால டாஸ்மார்க் சம்பாதிச்சது இவ்வளவு..

2007 - 60 கோடி சரக்கு விற்பனை

2008 - 200 கோடி சரக்கு விற்பனை

2009 - 230  கோடி சரக்கு விற்பனை

இந்த நிலைமைல அரசாங்கம் இந்த வருஷ வருமானத்த விடுமா. இத வச்சு தான நமக்கு எல்லாம் அடுத்து இலவச கேபிள் டிவி கொடுக்க முடியும்.

டாஸ்மார்க்கோட மொத்த வருமானம் விலைவாசிக்கு போட்டியா கூடிகிட்டேதான் போகுது.

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. நம்ம ரேஷன் கடைல சாமான் எல்லாம் என்ன விலைன்னு நமக்கு அங்க போனாத்தான் தெரியும். ஆனா குடிமகனுங்க நலனுக்காக எல்லா சரக்கோட விலையையும் அரசாங்க இணையத்தளத்துலேயே வெளியிட்டு இருக்காங்க. என்ன ஒரு சேவை மனப்பான்மை (இங்கே).

அதோட முக்கியமான இன்னொரு சேவையும் செஞ்சிருக்காங்க. அதே இணையத்தளத்துல புதுசா குடிக்க ஆரம்பிக்கறவங்களுக்காக எல்லா சரக்கோட பேரு அதன் ஸ்பசாலிட்டி அதன் ஹிஸ்டரி ஜியாகரபி எல்லாம் லிஸ்ட் வேற பண்ணி வைச்சிருக்காங்க (இங்கே). அரசாங்கத்தோட சேவைக்கு அளவே இல்லைங்க.. புல்லரிக்குது.

வாழ்க அரசாங்கம்!
வளர்க டாஸ்மார்க்!!


இதப்படிச்சுட்டு தண்ணி அடிக்க போறவங்க, நிதானமா போங்க.. சரக்கு கண்டிப்பா தீராதுங்க.. ஆனா ஹவுஸ் ஃபுல் போர்டு போட்டுற போறாங்க.. பார்த்துப்போங்க!!

மெகா ஜோக்
நோ கமண்ட்ஸ் - ஒன்லி படம்


(கூகுளில் பார்த்தது)



வாழ்த்துக்கள்
மின்னும் ஒளிச்சுடர்
இன்னும் கொஞ்சம்
வெற்றியை தரட்டும்!
படபடக்கும் பட்டாசுகள்
பசி, பழி, பிணி,
போர்தனை பொசுக்கட்டும்!
இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்!!
 


முக்கிய குறிப்பு: பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லி, தமிழ்வெளி, தமிழ்மணம் ஆகியவற்றில் ஓட்டுப்போடுங்கள்.


நம்பினால் நம்புங்கள் - பிரசவ செலவை கட்டமுடியாமல் மரத்தின் உச்சியில் வாழும் இந்தியன்

ஆம் நம்பினால் நம்புங்கள்!!

மனைவியின் பிரசவ செலவான 4000 ரூபாயை கட்ட முடியாமல் மரத்தின் உச்சியிலிருந்து இறங்க மறுத்து சில நாட்களாக இருந்து வருகிறார் (இங்கே)


இலங்கைக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்தம் இல்லை - சிறுகதை

முன் குறிப்பு - பெரியோர்களே தாய்மார்களே, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்தம் இல்லை, சம்பந்தம் இல்லை, சம்பந்தம் இல்லை. எல்லாரும் கேட்டுகிட்டீங்களா?

யானையன் தோட்டத்து ஆட்டுக்குட்டிகள் - சிறுகதை

ஒரு ஊரில் யானையன் தோட்டம்னு ஒரு தோட்டம் இருந்துச்சு.


ரஜினி: ஏமாற்றியதா இந்தியா டுடே?

சில நாட்களுக்கு முன் எந்திரன் பற்றிய ஒரு அமெரிக்க எழுத்தாளரின் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருந்தேன் (இங்கே). (அந்த மொழிபெயர்ப்ப செஞ்சதல இருந்து அடுத்து தாகூரோட எழுத்த மொழிபெயர்க்கலாமான்னு யோசனை வருது. அப்புறம் அடங்குடான்னு நமக்கு நாமே சொன்னாதான் அந்த ஆசை அடங்குது. எல்லாம் கலிகாலம்ல!!)


பி.ஹச்.டி படித்துவிட்டு தரை கூட்டும் 5000 பேர்

இந்த புள்ளி விவரங்கள் உங்களுக்கு ஆச்சிரியம் அளிக்கலாம். பி.இ. படித்தோமா கம்பூயட்டர் கம்பெனியில் வேலை வாங்கினோமா என்று வாழும் நமது இளைய சமுதாயத்திற்கு இந்த புள்ளி விவரங்கள் நிச்சியம் ஆச்சிரியமாகத்தான் இருக்கும்.


ரஜினி பூகம்பமா? கேலிச்சித்தரமா? அமெரிக்க பத்திரிக்கை அலசல்

எந்திரன் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் ஸ்லேட் என்ற அமெரிக்க இணையத்தளத்தில்  ரஜினிகாந்த் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதை எழுதியவர்



பரிசல்காரனின் சவால் சிறுகதை தொகுப்பு


தமிழ் இணையத்தளங்களில் ஒரு நல்ல நிகழ்வு. அதற்கு ஏற்பாடு செய்த பரிசல்காரருக்கு நன்றி. அவரின் இந்த போட்டிக்கு பலர் கதைகள் எழுதி அனுப்பி இருப்பர். அவரும் எல்லோரது கதைகளின் லிங்க்-களையும் கண்டிப்பாக வெளியிடுவார். அதற்குமுன் ஒரு சிலர் விருப்பபடலாமென நினைத்து என்னால் தொகுக்க முடிந்த தளங்களை இங்கே வெளியிட்டுள்ளேன். உங்கள் தளம் இங்கில்லையெனில் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.



காமினியின் கென்னல் டைமண்ட் (சவால் சிறுகதை)

சவால் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
 
"டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, காமினியை காப்பாத்துங்க. பல வருஷமா இவள என் மக போல வளர்த்துட்டு வர்ரேன்" பரந்தாமன் பரபரப்பாக இருந்தார்.

மயக்கதிலிருந்த காமினியின் ரத்தம் கசிந்த வாயை திறந்து நாக்கை பார்த்தார். மெலிதான ஊதா நிறத்தில் இருந்தது.

"என்னாச்சு?"

"தெரியல சார், அந்த போலீஸ்காங்க தான் சார் அடிச்சிருப்பாங்க. போயி கேட்டதுக்கு என்கிட்டேயே சண்டைக்கு வர்ராங்க, என்னத்த பண்ணுறது. நம்ம நேரம்னு பேசாம வந்துட்டேன். இந்த மாசத்துல மட்டும் இந்த மாதிரி நடக்குறது இது ரெண்டாவது தடவை. இவ ஒழுங்கா இருந்தா அவனுங்க ஏன் சார் அடிக்க போறாங்க? ஒண்ணும் ஆகாதுல்ல சார்?"

"இந்த கண்டிஷனுக்கு சயனாசிஸ்னு பேரு. ஆக்ஸிஐன் கொடுத்தா சரி பண்ணிடலாம். நர்ஸ், உடனே ஆக்ஸிஐன் மாஸ்கை வைங்க" என்று பக்கத்திலிருந்த நர்ஸிடம் கூறிக்கொண்டே பல்ஸ் பார்க்க தொடங்கினார்.

சில மணிநேரம் கழித்து, காமினி மெதுவாக கண் முழித்து பார்த்த போது தான் மருத்தவமனையில் இருப்பது புரிந்தது. டாக்டர் பக்கத்து பெட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்


"மிஸ்டர் பரந்தாமன், டாக்டர் தணிகாசலம் பேசுறேன். காமினி மறுபடி தப்பிச்சுட்டா."

"மறுபடியுமா? சரி விடுங்க டாக்டர். இங்க தான் வருவா. நான் பார்த்துக்குறேன். அவளுக்கு இப்ப ஒண்ணும் இல்லையே?"

"மயக்கம் தெளியுற வரைக்கும்தான் ஆக்ஸிஐன் தேவைப்படும். இப்ப அவளுக்கு ஒண்ணும் இல்லை.அடிபட்ட தழும்பு கொஞ்ச நாள்ல சரியாயிடும்."

"ரொம்ப தாங்க்ஸ் டாகடர்"

போனை வைக்கும்போது, பேரன் சிவா தீபாவளி துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
"தாத்தா, வா நம்ம திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடலாம்."

"நான் வரலடா, நீ மட்டும் விளையாடு"

"நான் மட்டும் எப்படி தாத்தா விளையாடுறது, நீ ரொம்ப போரு தாத்தா" என்று கத்திக் கொண்டே வாசலில் சென்று விளையாட தொடங்கினான்.

சிறிது நேரத்தில் வாசலில் அவனின் குரல் கேட்டது
"வா நம்மளாவது திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடலாம்."

காமினி அவனை சட்டை செய்யாமல் அந்த தெருவில் இருந்த பெரிய பில்டிங்கையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

" சரி, நீ தான் இப்ப திருடன். நான் உன்ன சுட போறேன். நீ இப்ப தப்பிச்சு ஒடனும்." சொன்னபடியே நடிக்க ஆரம்பித்தான்.

"உனக்கு எத்தன தடவ சொல்லுறது, உன்ன வெளில விட்டா மத்தவுங்களுக்குதான் ஆபத்து"

 “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா

"டேய் போடா அந்தப்பக்கம்" என்றபடி பரந்தாமன் வாசலுக்கு வந்தார்.

"நீ ரொம்ப போரு தாத்தா" என்று மறுபடியும் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

பரந்தாமனுக்கு காமினியை திட்ட மனம் வரவில்லை.

மறுநாள் காலையில் அந்த பெரிய பில்டிங்கில் போலீஸ் டிரில் சத்தம் கேட்டது. அது போலீஸ் கென்னல் பில்டிங். அங்கேதான் போலீஸ் நாய்களை டிரையினிங் செய்வார்கள். எக்மோரில் இந்த பில்டிங் மிகவும் பிரபலமானதுகூட.

காமினி சத்தம் ஏதும் செய்யாமல் மெதுவாக வீட்டைத்தாண்டி அந்த பில்டிங்கு சென்றாள். அந்த பில்டிங் பக்கதிலிருந்த திட்டில் நின்று பார்த்தால் அந்த க்ரவுண்ட் நன்றாக தெரிந்தது.


பத்து பன்னிரெண்டு நாய்கள் டிரையினிங்கில் இருந்தன. டைமண்டடை அந்த டிரையினிங்கில் தேடினாள். டைமண்ட் அந்த டிரையினிங்கில் இருந்த ஒரு புது K-9 வகை நாய். வந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கும்.

காமினியும் பரந்தாமனும் வாக்கிங் போகும்போதெல்லாம் டைமண்ட்டை பார்ப்பாள். என்னவோ அவளுக்கு  டைமண்ட்டை ரொம்ப பிடித்துவிட்டது. டைமண்ட்டுக்கும் இவளை பிடிக்கும்தான். ஒருமுறை இவளை பார்த்துவிட்டு ஒடிவரும்போது, காக்கி உடையிலிருந்த டிரையினர் டைமண்ட்டை பிடித்துவிட்டார். பலமுறை இதே கதை நடந்திருக்கிறது.

இதோ இன்றும் காமினி மறுபடி முயற்சிக்கிறாள்.

பரந்தாமனுக்கு வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டது. வாசலுக்கு வந்து பார்த்தார். காமினி டைமண்ட்டுடன் நினறு கொண்டிருந்தாள். பரந்தாமனுக்கு காமினி மேல் முதலில் ஆத்திரம் தான் வந்தது. இருந்தாலும் அவளின் மன உறுதியை கண்டு வியந்தார்.
 
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"எனக்கு உன்மேல கோபம் இல்ல காமினி. உனக்கு பிடிச்சத நீ செய்யுற. நீ நினைச்சத சாதிச்சிட்டதான். ஆனா முன்னாடியே சொன்னமாதிரி டைமண்ட் இந்த வீட்டுல இருக்க முடியாது. ரொம்ப பிரச்சன வரும். எனக்கு இதுக்குமேல என்ன சொல்லுறதுன்னு தெரியல?"

காமினிக்கு இது எந்த அளவுக்கு புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் டைமண்ட்டுடன் நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பத்தாள். காதல் வலிமையானது. கண்டிப்பாக அவர்கள் காதல் வெற்றி பெரும்.


டிஸ்கி: சவாலில் க்ரைம் கலந்த வரிகள் இருந்ததால் ஒரு சவாலாக, க்ரைமில்லாமல் முயற்சித்து எழுதியது. நாய்களுக்கும் காதல் வரலாம் இல்லையா? படித்தபின் பிடித்திருந்தால் ஒரு வரி சொல்லுங்களேன். கதை (மற்றும் படம்) எழுத தகவல்கள் தந்த நம்ம சென்னை இணைய தளத்திற்கும், Dog Owner's Home Veterinary Book-ன் கூகுள் தளத்திற்கும் நன்றிகள்- கதிர்கா


ரொம்ப அர்ஜென்டு - சிறுகதை

குறிப்பு - பெங்களூரு அரசியலுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை!!!

'அண்ணே, கொஞ்சம் தள்ளி உட்காருங்கண்ணே, இந்த பக்கம் இடமே இல்ல?'  ஓரத்தில் அமர்ந்திருந்த ராஜன் சொன்னார்.

'நாங்க என்ன இடத்த வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறோம். இருந்தா தள்ளி உட்காருவோம்ல' என்ற ஹமீது கடிகாரத்தை பார்த்துக்கொண்டே பதில் சொன்னார்.


ரசிக மகாக்குஞ்சுமணி

பசைக்கையை கழுவாம
பாயக்கூட விரிக்காம

வெறிந்தரையில கிடந்தான்
வெட்டிப்பய குஞ்சுமணி!


ஒரு பஸ்ஸும் பாவனாவும் பின்ன அந்த கிழவியும் - சிறுகதை

"மச்சி - உன் ஆளு பஸ் ஸடாப்ல நிக்கிறாடா?" ரவி வேகமாக வந்து சொன்னான்.



எந்திரன் பார்த்திட்டேங்க - சிறுகதை

எந்திரன் படத்த தலைவர் அறிவிச்சதிலிருந்தே அத கண்டிப்பா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் அமெரிக்கா வந்து மூணு மாசம் ஆகுது.


பிட் நோட்டீஸ் - 10/01/10

அயோத்தி தீர்ப்பு
ஊதி ஊதி பெரிசாக்கிய பலூன் நல்ல வேளை வெடிக்கவில்லை. தீர்ப்பிற்கு பின் இருக்கும் அமைதி மனதுக்கு நிம்மதி தருகிறது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஊத போகிறார்களாம். அதுவும் வெடிக்காமல் போக அல்லாவும் அரியும் உதவ வேண்டும்.



தென்கச்சி பக்கம்
தென்கச்சி சுவாமிநாதன் என்ற பெயரைச் சொன்னவுடன் 'இன்று ஒரு தகவல்'


ஒற்றை எழுத்தில் ஐந்து வரிகளில் ஒரு ராமாயணக் கவிதை

த என்ற எழுத்துவரிசையை மட்டும் வைத்து கைகேயி வரத்தை பற்றிய ஒரு பாடலை சமீபத்தில் ரசித்தேன்.


இப்படிக்கு புரியாதசாமி [2]

உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி
84 பேரு மேல கொலை கேஸ் இருக்கு
17 பேரு மேல திருட்டு கேஸ் இருக்கு


காளமேகப்புலவரின் காக்கா கவிதை - 2010ல் எழுதியது

வர வர சின்ன சின்ன ஆசைகள் நிறையா வருது. இந்த வாரம் மாட்டினவரு, நம்ம காளமேகப் புலவர் (அவர் ஆத்மா என்னை மன்னிக்க வேண்டும்).



கதிர்கா கவிதைகள் [5]

'முரளி'யிஸம்
பல முறை முயற்சித்தாலும்
எப்போது காதலைச் சொல்லப்போகும்போதும்
தயக்கமாகத்தான் இருக்கிறது!
காதலிகள் வேறுவேறு என்பதாலோ?


கல்வி விலை
டிவி இலவசம் - அமைச்சர் சொல்கிறார்
வேட்டிசேலை இலவசம் - அமைச்சர் சொல்கிறார்
அடுப்பு இலவசம் - அமைச்சர் சொல்கிறார் 
அரிசி சலுகைவிலை - அமைச்சர் சொல்கிறார்
கல்வி? அமைச்சரின் பி.ஏ.வைப் பார்க்கச் சொல்கிறார்
பெட்டி வாங்கி அட்மிசன் தருபவர் பி.ஏ. தானாம்!

பரபர  நிமிடங்கள்
ஐந்து நிமிடத்தில்
எல்லா வேலையையும் முடிக்க வேண்டும்.
பாத்திரம் கழுவப் போட்டு,
துணிகளை துவைக்கப் போட்டு,
வேலைக்காரிக்கு கதவு திறந்துவிட்டு,
அப்பாடியென உட்கார்ந்தாள்.
நல்ல வேளை இன்னும்
அடுத்த சீரியல் ஆரம்பிக்கவில்லை!


நம்பிக்கை
அணு ஆயதப்போரில் அன்று
உலகமே அழிந்தது!
மறுநாள்
சூரியன் மறுபடியும் உதிக்கிறான்,
ஒன்றிரெண்டு உயிரனங்களாவது
பிழைத்திருக்கும் என்றோ?


இப்படிக்கு புரியாதசாமி

நிஜமாவே எனக்கு புரியல பாஸ்!!!

 சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். மிகவும் கவலை தந்த செய்தி.
மேற்கு வங்க மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது, சரக்கு ரயில் மோதியதில் ஏழு யானைகள் பலியாயின. விரிவான செய்திக்கு இங்கே செல்லவும். ஒன்றும் அறியாத யானைகள் மனிதனின் தவறுகளினால் பலியானது மிகவும் துயரமான விஷயமே.

இவ்வாறு யானைகள் பலியானதாய் செய்திகள் வந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு செய்தியும் வெளியானது. அதாவது, சுற்றுப்புறச்சூழல் அமைச்சர், யானைகள் பலியானதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு யானைகள் மேல் உள்ள அக்கறை பாராட்டுக்குரியது. அதற்கு ரயில்வேத்துறை அமைச்சரும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடுத்த செய்தியும் வந்துள்ளது.

இதுல எனக்கு என்ன புரியலன்னு கேக்குறீங்களா? கடந்த ஆறு மாசத்துல மட்டும் இதுவரைக்கும் நடந்த ரயில்வே விபத்துகளில் கிட்டத்தட்ட 200 பேர் (பாவப்பட்ட மனுஷப் பிறவிங்கதான்) இறந்திருக்காங்க. அவையெல்லாம் ஒருநாள் ரெண்டுநாள் செய்திகளா வந்ததே தவிர எந்த ஆளுங்கட்சி அமைச்சரிடமிருந்தும் கண்டனச் செய்தியோ, ரயில்வே அமைச்சரிடமிருந்து நடவடிக்கை எடுத்த செய்தியோ வந்ததாக ஞாபகம் இல்லை.

ஒருவேளை, நம்ம கூட நாய் நரின்னு எதையாவது கூட்டிட்டுப்போய் அதுவும் நம்ம கூட இறந்தாதான் இந்த மாதிரி உடனடி நடவடிக்கை எடுப்பாங்களோ? இல்லைன்னா, யானைகளுக்கு கவலைப்பட சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் இருக்குற மாதிரி மனிதர்களுக்கு கவலைப்பட மனிதர்குல அமைச்சர் என்று ஒருத்தர அப்பாயின்ட் பண்ணனும்மோ?

நிஜமாவே எனக்கு புரியல பாஸ்!!!

- புரியாதசாமி


தமிழில் சொந்தமாய் ஒரு Palindrome கவிதை

தமிழுக்கு வந்த சோதனையாய் எனக்கு இந்த ஆசை வந்தது.

Palindrome என்ற வார்த்தை பலருக்கும் பரிட்சியமாக இருக்கும். அதாவது, ஒரு வார்த்தையையோ வரியையோ இடமிருந்து வலமாக படித்தாலும் வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக 'விகடகவி' என்ற வார்த்தை சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்து இவற்றை எழுதுவதைக் காட்டிலும் தமிழில் எழுதுவது சற்று கடினம்தான். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய வரிகள் ஆங்காங்கே காணப்படிகின்றன. ஒரு முழுப்பாடலையே அப்படி எழுதுவது அதனினும் கடினம்தான்.

அப்படிப்பட்ட முழுப்பாடல், திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தில் உண்டு. அதைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும். திருக்குறளை கோனார் நோட்ஸில் மட்டுமே படித்த பரம்பரை என்பதால் எனக்கு அந்த வரிகள் சுத்தமாக புரியவில்லை. அந்த வரிகளுக்கான அர்த்ததிற்கு இங்கே செல்லவும்.

ஔவையின் இந்த வரிகள் படிக்க சற்று சுலபமானது (இதையும் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை!!).
'நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ'.
 'நீங்காத பெரிய தவத்தையுடைவனே! மிகுந்த மயக்க வேட்கை கெடாது, அழகிய பெண்ணுடைய ஆசையை நீக்குவாயாக'

இதைவிட சற்று சுலபமாக ஏதாவது உண்டா என்று இணையத்தை துழாவிய போது அண்ணாகண்ணனின் இந்த வரிகளைக் கண்டேன்.
வாய்போல் சரிவில் தினமழை கோணிபிடி
கோவில் தோத்தோத் தோத்திரமயம் - ஆம்ஆம்
யமரதித் தோத்தோத் தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா
 அர்த்தமறிய, இங்கே செல்லவும்.

எல்லாம் சரி, சொந்த பிட்டாய் என்ன செய்யலாம்னு யோசிட்ட இருந்தப்ப, எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமான்னு களத்துல இறங்க முடிவு பண்ணிட்டேன். முடிந்தவரை நடைமுறைத் தமிழ்ல எழுதலாம்னு ரெண்டு மணி நேரம் கழிச்சு பிடிச்சுட்டேன். இதோ நம்ம படைப்பு.

பக்தி
பூ தந்தம் பசு வருக - தேயாதே
கருவ சுபம் தந்த பூ

(கருவம் -  கரு, உள்மையம், முதன்மை)
அதாவது,  பூ, தந்தம், பசு என்று சிறியது முதல் பெரியது வரை எந்த செல்வம் வந்தாலும் உள் மனதில் உண்மையான சந்தோஷம் தந்த பூ போன்ற பக்தி மனதில் என்றும் குறையாது!!! (நல்லா இல்லைன்னா விட்டுறுங்கோ)

டிஸ்கி: மேலே உள்ள பதிவ படிச்சுட்டு என்னை பெரிய இலக்கியவாதின்னு நீங்க நினைச்சு செப்டம்பர் Fool ஆயிட்டங்கன்னா அதற்கு நான் பொறுப்பல்ல.





பிட் நோட்டீஸ் - 9/27

சமீபத்தில் ரசித்த ஒரு நகைச்சுவை உரையாடல்
அவன்: யானையை விட பெருசா இருக்கும். இருந்தாலும் எடையே இருக்காது. ஆனா லட்சம் பேர் சேர்ந்தாலும் அத தூக்க முடியாது. அது என்ன?
இவன்: தெரியலடா....
[உங்களுக்கும் தெரியலையா? விடை இந்த பதிவின் கடைசியில்]

Business Tips - சின்னஞ்சிறுகதை
அவருக்கு அன்று 30-வது திருமண நாள்.
தினமும் சாமி கும்பிடும் அவரிடம் அன்று கனவில் கடவுள் தோன்றி
"பக்தா! உனக்கு என்ன வரம் வேண்டும். ஒரே வரம்தான், ஒருவர் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். என்ன வேண்டும் கேள்" என்றார்.
மிகுந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன அவர்,
"என் மனைவிக்கு 50 வயசாயிடுச்சு. எனக்கு இளமையான மனைவிதான் பிடிக்கும். அதனால என் மனைவி என்னைவிட 25 வருஷம் இளமையா இருக்கணும். அதுக்கு வரம் கொடுங்க" என்றார்.
கடவுள் சிரித்துக்கொண்டே நாளை காலை எழுந்திருக்கும்போது வரம் நிறைவேரும் என்று கூறிவிட்டு மறைந்தார்.
மறுநாள் விடிந்தது. அவர் எழுந்து மனைவியைப் பார்த்தார். அவர் மனைவி இளமையாக எல்லாம் மாறவில்லை. வெறும் கனவுதானா அது என்று கஷ்டப்பட்டு எழுந்து கண்ணாடியைப் பார்த்தார். 55 வயதான அவர் 75 வயதாய் மாறிவிட்டிருந்தார்.

நீதி:
நம்ம பிஸினசுல இன்னொருத்தரோட உதவி கேட்டோம்னா, என்ன உதவி, அது எப்படி வேணும்னு க்ளியரா சொல்லணும். இல்லைன்ன அந்த உதவியே உபத்திரவமாகிவிடும்.
[எங்கோ கேட்டது]

ரசித்த ஹைக்கூ
சகுனம்
பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?

ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்
[ரசிகவ் ஞானியார்]

பி.கு: இரண்டாவது கவிதை முதலில் புரியவில்லை. பின்னர் மற்றொரு நண்பரின் கருத்து மூலம் புரிந்தது. அதாவது, புதுத்துணிக்கு வழியில்லாத்தால், தாய் தன் சேலையின் பாதியை மகளுக்கு தருகிறாராம்.


ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கான விடை,
அவன்: யானையின் நிழல்


கதிர்கா கவிதைகள் [4]

விவசாயி
விதைத்து நெல்,
பல மாத உழைப்பில்,
விளைந்தது கடன்.

பத்தரப்பதிவு
ப்யூன் ஐந்தாயிரம் லஞ்சம்
கேட்டவுடன் ஏமாற்றுக்காரனென
எரிச்சல் வருகிறது,
ஐம்பது லட்ச வீட்டை
இருபது லட்சத்துக்கு
பதிய சென்றவனுக்கு!!!

வேலைவாய்ப்பு அலுவலகம்
கொடுக்க வேலையில்லை,
அங்கே வேலை(!) செய்யும்
பத்து பேருக்காக
தினமும் திறந்து வைத்திருக்கிறார்கள்!!

அம்மா மகள் சண்டை
அவர் வந்தவுடன் அவளை அதட்ட சொல்ல வேண்டும்
அம்மா மனதுக்குள் நினைத்தாள்!
அப்பா வந்தவுடன் உன்னை திட்ட சொல்லுறேன்
அம்மாவிடம் மகள் சொன்னாள்!!


எங்கள் தெரு சிட்டுக்குருவிகள் எங்கே போயின?

எங்கள் தெரு சிட்டுக்குருவிகள் எங்கே போயீன?

இன்றோடு எனக்கு பதினாறு வயது!
நான் ஆறாவது பிறந்த நாளை இந்த தெருவுக்கு வந்த பிறகுதான் கொண்டாடினேன்
ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளுக்கு
மிட்டாய் கொடுக்க போனபோது
என் தலைக்குமேல் பத்துபதினைந்து சிட்டுக்குருவிகள்...

என் எட்டாவது வயதில், எங்கள் வீட்டின் முன்
நான் நட்டிருந்த கொய்யாச்செடி முளைப்பதற்குள்
சாக்கடைக் குழாயாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த பத்துபன்னிரெண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

என் பத்தாவது வயதில், எங்கள் வீட்டின் முன் இருந்த மாமரம்
நான் பள்ளி சென்றுவருவதற்குள்
மின்சாரக் கம்பமாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த எழெட்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

என் பன்னிரெண்டாம் வயதில், எங்கள் வீட்டின் முன் இருந்த மண்ரோடு
நான் ஆயா வீட்டில் லீவு முடிந்து வருவதற்குள்
தார் ரோடாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த நாலைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

என் பதினாலாம் வயதில், எங்கள் வீட்டு பழைய டிவி
புது கேபிள் மாட்டியதிலிருந்து
எண்பது சேனல்கள் கொண்டதாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?

நேற்று எங்கள் வீட்டில்
இன்டெர்நெட் வாங்கியதலிருந்து
கம்ப்யூட்டரில் உலகத்தையே பார்க்கலாமாம்!
ஆனால் இப்போது எங்கள் தெருவில்
ஒரு சிட்டுக்குருவியைக் கூட பார்க்க முடியவில்லை,
அவையெல்லாம் எங்கே போயின உங்களுக்குத் தெரியுமா?
எனக்கு சிட்டுக்குருவிகளை ரொம்ப பிடிக்கும்!!!


பிட் நோட்டீஸ் - 9/24

அயோத்தி வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
வானத்தில் கிழக்கு மேற்கு எனப் பாகுபாடு கிடையாது. எல்லா திசையும் ஒன்றுதான். அதைப் பார்க்கும் மனிதரின் மனம்தான் அதை வேறுபடுத்தி பார்க்கிறது - சொன்னது புத்தர்

சமீபத்தில் படித்த ஜென் கதை
இரு துறவிகள் சாலையில் சென்று கொன்றிருந்தனர். சாலையின் நடுவே மழைநீர் தேங்கி முழங்கால் அளவு இருந்தது. வெள்ளையுடை அணிந்து தேவதை போன்ற இளம்பெண் ஒருத்தி அந்த குறுகிய சாலையில் நடந்தால் உடை அழுக்காகி விடுமென்று ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருந்தாள். இந்த இரு துறவிகளைக் கண்டவுடன் தனக்கு உதவுமாறு கேட்டாள். இளைய துறவி சற்று தயங்கினார். மூத்த துறவி தாமதிக்காமல் அவளை கைகளில் தூக்கி சாலையை கடக்க உதவினார்.
அவர்கள் இருப்பிடத்திற்கு வந்த பிறகு, பல மணிநேரம் கழித்து, இளைய துறவி மூத்த துறவியிடம் கேட்டார், 'அய்யா! துறவியாகிய நாம், பெண்களை தொடக்கூடாது அல்லவா? நீங்கள் அந்த பெண்ணை தூக்கியது சரியில்லை அல்லவா?'. மூத்த துறவி சொன்னார், 'நான் தூக்கிய பெண்ணை சில நிமிடங்களில் இறக்கி வைத்துவிட்டேன் சகோதரரே! நீங்கள் தான் அந்த பெண்ணை இன்னும் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்'

நான் ரசித்த ஹைக்கூ
கடற்கரையில் நினைவுக்காக
அவள் விட்டுச் சென்றச் சுவடுகள் -
வருகிறது அலை!

திருவிழாவில் மகிழ்கிறது,
பலிகடா ஆடு -
வாக்காளன்!
[சந்தர் சுப்ரமணியன்]

படித்த ஜோக்
அவனை மூளை மாற்ற அறுவைச்சகிச்சைக்கு சென்றான். சாதா மூளை ஒரு லட்சம், ஸ்பெசல் மூளை பத்து லட்சம் என்று அறிவிப்பு பலகை இருந்தது. டாக்டரிடம் ஸ்பெசல் மூளை என்றால் என்ன என்று கேட்டான். டாக்டர் சொன்னார், 'சாதா மூளை சாதாரண குடிமகனுடையது. ரொம்ப யூஸ் செய்யப்பட்டது. ஸ்பெசல் மூளை அரசியல்வாதியுடையது. ஒருமுறை கூட யூஸ் செய்யப்படாதவை'


எந்திரன் பார்க்கலையோ - சிறுகதை

எந்திரன் வந்தாலும் வந்தது, என் உயிரே போகுது. எனக்கு ரஜினி மேலேயும் கோபமில்லை, சன் டிவி மேலேயும் கோபமில்லை. அவங்க கனவைக் காசாக்க, காசைக் கரியாக்கி எடுத்துருக்காங்க. படம் ஓடுனாலும் சரி, படம் பார்க்கிறவங்க ஓடுனாலும் சரி அவங்க பிரச்சனை. எனக்கு கோபம் அவங்க மேல இல்லை. யார் மேல கோப்படுறதுன்னே தெரியல. என் கோபம் அப்படி.

நான் அமெரிக்காவில் ஏதோ ஒரு நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண தகவல் தொழில்நுட்ப தொழிலாளி. இந்திய ராஜா அமெரிக்காவில் பிச்சையெடுத்தானாம் என்ற கதையாக 'விசா'வைத்தக்கவைக்க ஊரும் வேலையும் மாறி மாறி இந்த ஊரு வந்திருக்கிறேன். நான் இருக்கும் இந்த ஊரில் எல்லா அமெரிக்க பெருநகரைப் போலவும் இந்தியர்கள் அதிகம். என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கும் உண்டு. சராசரிக்கும் குறைவான வசதிகளே கொண்டதால் அந்த திரையரங்கிற்கு அமெரிக்க மக்கள் அவ்வளவாக வர மாட்டார்கள். அந்த காரணத்தினால், அங்கு இந்தியப்படங்களே வெளியிடப்படும். அதிலும் பெரும்பாலும் தெலுங்குப்படங்களே ஓடும். எப்பவாவதுதான் தான் தமிழ் படங்கள் வரும். அப்படித்தான் இப்போது எந்திரன் வந்துள்ளது.

இது சந்தோஷமான விஷயந்தானே என்கிறீரகளா? அப்படியென்றால் உங்களுக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் வித்யாசமில்லை. எனக்கு எந்திரன் பார்க்க விருப்பமில்லை. அதற்கு பெரிதான காரணமென்று எதுவுமில்லை. எனக்கு பாரக்க வேண்டாமென்று தோன்றியது, அவ்வளவுதான். அவ்வாறு தோன்றியது தப்பில்லை தானே. ஆனா எது தப்புன்னா அந்த திரையரங்கம் என் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இருந்ததுதான்.

போன வாரம் தான் அந்த படம் இங்கு வெளியிடப்பட்டது. இந்த ஊரில் எனக்கு தெரிந்த தெரியாத எல்லா தமிழர்களும் (சில தெலுங்கர்கள் உட்பட) பார்த்துவிட்டனர். பார்க்க வந்த சிலர் என் வீடு பக்கத்தில் இருப்பதால் என் வீட்டற்கும் வந்தனர். என் மனைவி வேறு இந்தியா சென்றிருப்பதால் போன் செய்யாமல் கூட வந்தனர். (மனைவி இருந்தால் முதல் நாளே போன் செய்து நாளை வரலாமா என்று கேட்டுத்தான் வருவர். இது என் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையா அல்லது எனக்கு கொடுக்கும் அவமரியாதையா என்று தெரியவில்லை)

வந்தவங்க எல்லோரும் சொல்லிவச்ச மாதிரி கேட்குற ஒரே கேள்வி, 'எந்திரன் பார்த்துட்டயா?' இல்லைன்னு சொன்னா, 'ஏன் பார்க்கல, ரஜினி பிடிக்காதா, கமல் ரசிகரா, ஷங்கர் பிடிக்காதா, சளி பிடிக்காதா'ன்னு அடுத்தடுத்து கேள்விக்கணைகள். பதில் சொல்லி மாளல. கடைசில அடுத்த வாரத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கேன்னு சொன்னாதான் விட்டனர். அதிலையும் ஒருத்தர் ஏன் இந்த வாரமே பார்க்கலைன்னு கேட்டாரு, என்ன சொல்லுறதுன்னு தெரியல அப்ப, சும்மா வழிஞ்சு வைச்சேன்.

சரி வீட்டுக்கு வர்றவங்க தான் இப்படின்னா, நேத்து வால்மார்ட் கடைக்குப் போனேன். (வால்மார்ட் இந்தியாக்கு வருதாமே, அண்ணாச்சி கடைகள் எல்லாம் பாவந்தான்). கடைல, ரெண்டு பேர் இதே கேள்விகளைக் கேட்டனர். அடுத்த வாரம்னு இன்ஸ்டென்ட் பதில் சொன்னேன்.

இன்னைக்கு திங்கட்கழமை ஆபிஸ் போனேன். ஆபிஸ்ல ஒரு மெக்சிகன் கேட்டான், 'உன் வீட்டுக்குப்பக்கத்துல உள்ள திரையரங்குள்ள ரோடு வரைக்கும் க்யூல நின்னாங்களே என்ன விஷயம்'. நான் எந்திரன், ரஜினி பற்றியெல்லாம் எடுத்து சொன்னேன். அவனும் கேட்டான் நான் பார்த்து விட்டேனா என்று. இல்லையென்று சொன்னேன், மற்றவர்களைப்போலவே ஏன், எதற்கு என ஆரம்பித்துவிட்டான். அவனிடமும் அடுத்த வாரம்னு பதில் சொல்லிவிட்டேன்.

மெக்டொனால்டில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது பக்கத்து வீட்டுக்காரரும் அதையே கேட்டார். அதையே சொன்னேன்.

வீட்டுக்குள் டிவியை ஆன் செய்துவிட்டு ஷோபாவில் உட்கார்ந்தேன். விஜய் டிவியில் போட்ட நிகழ்ச்சியையே மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தனர். (விஜய் டிவி அமெரிக்காவில் மட்டுந்தான் அப்படிப் பண்ணுறாங்களான்னு தெரியல). பக்கத்து வீட்டு நண்பர் போன் செய்தார். இந்த வாரத்தோட தமிழ் எந்திரன தூக்கிட்டு தெலுங்க Robo-வ (எந்திருடுன்னு ஏன் பேர் வைக்கல?) போடுறாங்களாம். அதனால இந்த வாரமே பார்க்கச் சொன்னார். நன்றி சொல்லி போனை வைத்தேன்.

அடப் போங்கய்யா. நானும் நாளைக்கு க்யூல நின்னு எந்திர ஜோதில ஐக்கியமாயிட வேண்டியதுதான். அந்த படத்த பார்க்காம கோட்டை விட்டா, ஏன் பார்க்காம விட்டுட்டங்குற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது.

[பின் குறிப்பு: இந்த பின் குறிப்பை எழுதுவது மேலே சொன்ன நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு. எந்திரன நேத்து பார்த்துட்டேன். படம் எப்படின்னு கேட்கிறீங்களா? அட, நீங்க இன்னுமா திருந்தல. என்னால முடியல. இப்பவும் சொல்லுறேன், எனக்கு யார் மேல கோப்படுறதுன்னே தெரியல. என் கோபம் அப்படி]


கதிர்கா கவிதைகள் [3]

அலட்சியம்
சட்டையோரக் கறையை தண்ணீர் விட்டுத் துடைத்தேன்!
துடைத்த பின்னர் தரையில் விழுந்து
வெள்ளைத் துண்டு அழுக்கானது,
கவலையின்றி மிதித்துச்சென்றேன்!
ஹோட்டல் அறை!!!

சுதந்திரம்
'டேய் திரும்பாதே'
'டேய் பேசாதே'
'டேய் நேரா நில்லு'
ஆசிரியர் எல்லா மாணவரையும்
கட்டுக்கோப்பாய் நிற்க வைத்திருந்தார்!
சுதந்திர தின கொடியேற்ற விழாவாம்!!

நல்ல நேரம்
ஐந்து முதல் ஆறரை வரை நல்ல நேரமாம்,
சிலிர்ப்பிய ஆட்டை ஐந்தரைக்கு வெட்டினர்!
சத்தம் வருவதற்குள் சகலமும் அடங்கியது!
நல்ல நேரம் மனிதருக்கு மட்டும் தானோ?
ஆடுகளுக்கு இல்லையோ?


சின்னஞ்சிறுகதை - இரண்டே வார்த்தைகளில்

பக்கம் பக்கமாய் பேசும் கதைகள் உண்டு. ஒரே பக்கத்தில் எழுதப்படும் கதைகளும் உணடு. ஆனால் ஒரு சில வார்த்தைகளிலும் கதை சொல்லலாம். [எழுத்தாளர் சுஜாதா சில ஆண்டுகளுக்கு முன் இதைப்பற்றி எழுதியதாய் ஞாபகம்]

என்னை வசித்த ஒரு கதை Ernest Hemingway எழுதியது.
"விற்பனைக்கு: குழந்தையின் செருப்புகள், உபயோகப்படுத்தப் படாதவை."
[For sale: baby shoes, never worn] ஒரே வரியில் மனதை உருகச்செய்யும். இது உலகப்புகழ் பெற்ற வரிகளாய் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை.

உலகளவில் பிரபலமான மற்றொரு கதை,
"அவன் கண் விழித்த போது டைனோசர் இன்னும் அங்கிருந்தது"
"When he woke up, the dinosaur was still there" எழுதியது Augusto Monterroso.

நான் ரசித்த அறிவியல் புனைவு [Science Fiction-ஐ இப்படித்தானே கூறுவார்கள்] கதை இதோ: "அன்றைய தினம் சூரியன் மேற்கே உதித்தது"
"That morning the sun rose in the west" இதை எழுதியது Anthony Burgess.

திகில் கதையை பொறுத்த வரையில் எனக்குப் பிடித்தது இது,
"உலகின் கடைசி மனிதன் அறையில் அமர்ந்திருந்தான். அறைக்கதவு தட்டப்பட்டது".
"The last man on Earth sat alone in a room. There was a knock on the door..." இதை எழுதியது Fredric Brown.

ஒரு மசாலா கதை, "கடவுளே! நான் கர்ப்பம்!! யார் காரணம்"
"Good God, I'm pregnant, I wonder who did it" எழுதியது யாரென்று தெரியவில்லை.

இதையெல்லாம் சொல்லி நம் பங்கு என்று எதுவும் வேண்டாமா?
"ஒழிந்தான் கடவுள்"


கதிர்கா கவிதைகள் [2]

இலாபம்
யார் சொன்னது பங்குச்சந்தையே  இலாபமானது என்று?
வாக்காளர் அட்டை அடக்க விலை நூறு ரூபாய்.
ஒவ்வொரு தேர்தலிலும் சந்தை விலை
ஐநூறு முதல் ஆயிரம் வரை.
இந்தியா வளர்கிறது!


லஞ்ச லைசன்ஸ்
எட்டு போட்டேன் கிடைக்கவில்லை,
பிச்சை  போட்டேன் கிடைத்தது.

வரதட்சணை
கட்டிய சேலையுடன் வா!
பட்டு புடவைகளை பெட்டியில்
எடுத்துவா கசங்கிவிடும்!!

அருங்காட்சியகம்
அடர்ந்த மரங்கள்,
பச்சை புல்வெளி,
சில்லென்ற காற்று,
அழகிய சூழல்,
கூண்டுக்குள் கிளி.


எந்திரன் அமெரிக்காவில் நாளை ரிலீஸ்

ஆச்சரியம்!!! ஆனால் உண்மையா?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளை நிறுவனமான பிக சினிமாஸ் இணையத்தளத்தில் இத்தகவல் உள்ளது. நாளை (9/23/10) வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு அதன் வெர்ஜினியா திரையரங்கில் எந்திரன் திரையிடப்படுவதாக உள்ளது.

இந்தியாவிலேயே அடுத்த வாரம் வெளியாவதாக செய்திகள் வந்துள்ள நிலையில் அமெரிக்காவில் நாளை திரையிடப்படுவதாக உள்ள செய்தி ஆச்சரியம் தானே!!!

இதே செய்தியை அமெரிக்காவில் பிரபலமான movietickets.com  இணையத்தளமும் உறுதி செய்கிறது.

கலைஞரிடமிருந்தோ ஒபாமாவிடமிருந்தோ வாழ்த்துச் செய்தி எதுவும் வெளியாகத்தால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லையென நினைக்கிறேன்.



பிட் நோட்டீஸ் - 9/22

சின்னஞ்சிறு கதை "Management Short Story"
ஒரு காகம் மரத்தின் உச்சியில் நகராமல் எட்டு மணி நேரம் அமர்ந்து இருந்தது. அதைக் கண்ட முயல் ஒன்று எப்படி ஒன்றுமே செய்யாமல் உன்னால இருக்க முடியுது அப்படின்னு கேட்டதாம்.

அதற்கு அந்த காகம், 'அது ரொம்ப ஈசி.. கண்ண முழிச்சுக்கிட்டே தூங்க கத்துக்கணும்.. எதுக்கும் ரொம்ப Strain பண்ண கூடாது..'. அதைக் கேட்ட முயல் மரத்தடியில் தானும் உட்கார்ந்தது. ஒருசில மணி நேரங்களில் அந்தப்பக்கம் வந்த ஒரு நரி அசையாமல் உட்கார்ந்து இருந்த முயலை ஒரே நிமிடத்தில் அடித்துத் தின்றது.

கதையின் நீதி - "எந்த வேலையும செய்யாமல் இருக்க நீ உயர்ந்த Position-ல் இருந்தால் மட்டுமே முடியும்"

[எங்கோ படித்தது]
----------------------------------------------------------------------------------
நான் ரசித்த ஹைக்கூ -
வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழந்தை
வேறு பக்கம் பறக்க மாட்டாயா
[நன்றி: மாலன் நாராயணன்]
----------------------------------------------------------------------------------


கதிர்கா கவிதைகள் [1]

மனைவியின் மரணம்
நான் வாழும் வீட்டில் என்னை சேர்த்து ஆறு பேர்.
மகன், மருமகள், பேரன், பேத்திகள்.
நான் மட்டும் தனியே!!!

கற்பனை
குருவிகளின் சத்தம்,
வண்டுகளின் ரீங்காரம்,
அனைத்தும் சுவைக்கிறேன்
கவிதைகளில் மட்டும்.

முரண்
'சோ' என பெய்யும் மழை...
மகிழ்ச்சியில் மலைவாழ் மரங்கள்,
நான் மட்டும் பழித்தேன்....
என் மலைச்சுற்றுலா தடைப்பட்டதென்று!!!

கணக்கு
ஒன்றும் ஒன்றும் இணைந்து மூன்றானால் கல்யாணக் கணக்கு!
ஒன்றும் ஒன்றும் இணைந்து ஒன்றானால் காதல் கணக்கு!
ஒன்றும் ஒன்றும் இணைந்து இல்லாமல் போனோமே சாதிக் கணக்கால்!!!


முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம். உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.