ரஜினி: ஏமாற்றியதா இந்தியா டுடே?

சில நாட்களுக்கு முன் எந்திரன் பற்றிய ஒரு அமெரிக்க எழுத்தாளரின் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருந்தேன் (இங்கே). (அந்த மொழிபெயர்ப்ப செஞ்சதல இருந்து அடுத்து தாகூரோட எழுத்த மொழிபெயர்க்கலாமான்னு யோசனை வருது. அப்புறம் அடங்குடான்னு நமக்கு நாமே சொன்னாதான் அந்த ஆசை அடங்குது. எல்லாம் கலிகாலம்ல!!)


அந்த மொழிபெயர்ப்பின் இறுதியில் அந்த கட்டுரைக்கு இரணடாம் பாகம் உண்டு என்று கூறியிருந்தேன். இதோ அந்த இரண்டாம் பாகம். இது அந்த கட்டுரையின் தொடர்ச்சி அல்ல, அந்த கட்டுரை சம்பந்தப்பட்ட தொடர்ச்சி மட்டுமே. முதல் கட்டுரையை படிக்காதவர்கள அதை படித்தபின் இதை படிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் (இப்படி சொன்னாதான் அந்த முத கட்டுரைய இன்னும் கொஞ்சபேரு படிப்பாங்க. எல்லாம் ஒரு பப்லிசிட்டிதான்!!!).


அக்டோபர் மாத இந்தியா டுடேயில் ரஜினியை பற்றி வந்துள்ள தலையங்கம்
'ஜாக்கிச்சான் ஆசியாவில் அதிக  சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் எண்பதுகளிலிருந்து நடிப்பதுடன் இல்லாமல், தயாரிப்பாளாரகவும், இயக்குனராகவும் இருந்துவந்தாலும், ரஷ் ஹவர், கராத்தே கிட் என பல ஹாலிவுட் படங்களின் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவராக இருக்கிறார். ஆனால் ஆசியாவில் அதிக  சம்பளம் வாங்கும் நடிகரில் இரண்டாவது இடம் யாருக்கு என்று கண்டிப்பாக உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாது. வழுக்கை தலையுடன் நடுத்தர வயது தொப்பையுடன் இந்தியாவில் தமிழ்நாடு என்ற இடத்திலிருந்து,  எண்பதுகளில் காலாவதியான மீசையுடன் இருப்பாரென்று கண்டிப்பாக யூகித்திருக்க மாட்டீர்கள்.ரஜின்காந்த் என்ற அவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல, யாருடைய கட்டுப்பாட்டுக்கும் அடங்காதவர். அவரை வர்ணிக்க வேண்டுமெனில், புலிக்கும் புயலுக்கும் பிறந்த ஒருவர் நிலநடுக்கத்தை மணம் செய்தால் அவருக்கு பிறப்பது ரஜின்காந்தாக இருக்கும். அதாவது அவர் படங்களில் கூறப்படுவது போல் சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தாக இருக்கும்.

நீங்கள் இதுவரை  ரஜினிகாந்தை பற்றி கேள்விப்படவில்லை என்றால் அக்டோபர் ஒன்று அன்று அறிந்து கொள்வீர்கள். அன்று தான் அவரின் எந்திரன் என்ற திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகிறது. அந்த படமே இந்தயாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக செலவில் தயாரானது ஆகும். உலக அரங்குகளில் இரண்டாயிரம் பிரிண்டுகளுக்கு மேல் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தளவு அதிக செலவுக்கு காரணம், சண்டைக்கு யூவான் வோ-பிங் (The Matrix), அனிமேஷனுக்கு ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டூடியோ (Jurrassic Park), ஸ்பெசல் எபக்ட்ஸூக்கு ஜியார்ஜ் லூகாஸ், இசைக்கு ஏ.ஆர். ரகுமான் (Slumdlog Millionaire) என பல ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இருந்த போதும் இவ்வளவு செலவையும் மீறி இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்ப காரணம் இது ரஜின்காந்த் என்ற நடிகரின் படம் என்பதால்
'


முந்தய கட்டுரையை படித்திருப்பீர்களெனில் Hendrix-ன் கட்டுரையிலிருந்து, இது அப்படியே ஈயடிச்சான் காப்பி என இந்நேரம் உணர்ந்திருப்பீர்கள். இந்த காப்பி அடித்த செயல் சந்து பொந்தெல்லாம் நிறைந்திருக்கும் இந்தியர்களாலும் இணையத்தாலும் விரைவில் சந்தி சிரித்தது. இந்த தவறை உணர்ந்த இந்தியா டுடே ஆசிரியர் அடுத்த இதழில் மன்னிப்பு செய்தி வெளியிட்டார்.


இந்தியா டுடேயின் அடுத்த இதழில் வந்துள்ள மன்னிப்பு(?) செய்தி
'ஜெட் லேக் (Jet Lag) உண்மையில் உடலுக்கு கேடானதுதான். அமெரிக்காவில் நான் இருந்தபோது ஜெட் லேக்கால் உண்டான தூக்கமின்மையால் இந்தியா டுடே பத்திரகையின் அட்டையை வட இந்தியாவிற்கு ஒன்றாகவும் தென் இந்தியாவிற்கு ஒன்றாகவும் பிரிப்பதெனஅசாதரணமான முடிவை எடுத்தேன். அதன்படி தென் இந்தியாவிற்கு பெரும்புகழ் பெற்ற ரஜினிகாந்தையும் மற்ற இடங்களில் உமர் அப்துல்லாவையும் அட்டைப்படமாக வைப்பது என முடிவு செய்தோம். அதனால் அட்டைப்படங்களுக்கு ஏற்றவாறு இரண்டு தலையங்கங்கள்தயாராக வேண்டி இருந்தது.  தென்னக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் டில்லியில் உள்ள பணியாளர்களிடம் சில கருத்துக்கள் கேட்டேன். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களில் துரிதிருஷ்டவசமாக வேறு ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள் என்னுடைய கட்டுரைக்கான கருத்துக்களில் இணைக்கப்பட்டது. எப்படி இருந்தாலும் மன்னிப்பு சரியான விளக்கமாகாது. என் தவறுதான். வருத்தங்கள்'

இதை தவிர  இந்தியா டுடே ஆசிரியர் அந்த அசல் கட்டுரையை எழுதிய Hendrix-க்கும் அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கும் தனித்தனியாக கடிதமும் எழுதினார்.



அந்த கடிதங்களுக்கு Hendrix-ன் விளக்கம் பாருங்களேன்.
'நான் எழுந்திருக்கும் தருணங்கள் பெரும்பாலும் இந்திய ஊடக பெருந்தலைகளிடமிருந்து மன்னிப்பு கடிதங்களுடன் விடவதில்லை. அதற்கு காரணம் என்னுடைய கட்டுரைகள் அவர்களின் பத்திரகைகளில் அவர்களின் சொந்த படைப்பாக இதுவரை வந்ததில்லை. ஆனால் அது நடந்தது. எல்லோரும் தவறு செய்வார்களே. ஆனால் அதற்கு வருத்தம் கேட்கும்போதும் வருத்தம் சிறிதும் இல்லாமல் கேட்க கோடீஸ்வர இந்திய ஊடக ஆசிரியராலேயே முடியும்.

இதோ எனக்கு வந்த அந்த கடிதம் (இந்தியா டுடே ஆசிரியரிடமிருந்து).

உங்கள் கட்டுரையின் ஒரு பகுதியை எனது தலையங்கத்தில் கவனக்குறைவால் உபயோகப்படுத்தியதற்கு, எங்கள் வாசகர்களிடம் நாங்கள் வருத்தம் தெரிவத்தை கட்டாயம் அறிந்திருப்பீர்கள்.
உங்களிடமும் என் வருத்ததை தெரிவிக்க விரும்புகிறேன்.
ஸ்லேட் பத்திரிகையின் ஆசிரியருக்கும் தெரிவித்துள்ளேன்.

கட்டாயம் அறிந்திருப்பீர்கள் என அவர் கடிதத்தை ஆரம்பித்திருப்பது பார்த்து சிரித்தேன். அவருடைய தலையங்கத்தில் கவனக்குறைவாக ரஜினிகாந்த் பற்றிய எனது கட்டுரையின் பகுதி வந்ததாக டைப் செய்யும்போது கண்டிப்பாக அப்பாடி என்று பெருமூச்சு விட்டுருப்பார். ஏதோ நானும் அவரும் சாலையில் கடக்கும்போது எதிர்பாராமல் மோதிக்கொண்டது போலவும் அப்போது எனது இந்த கட்டுரை தெரியாமல் அவரது தலைங்கத்தில் விழுந்துவிட்டது போலவும் கூறுவது நல்ல நகைச்சுவைதான். மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என அவர் கூறியவுடன், ஓ மன்னிப்பு கேட்க போகிறார் என நினைத்தேன். கடைசியில்தான் தெரிந்தது மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் எனக்கூறுவதுதான் மன்னிப்பு என்று. அய்யோடா!! '


இவ்வாறாக அந்த கட்டுரை அந்த கடித்ததையும் அதன் எழுதப்பட்ட தோரணையையும் விமிர்சித்து நாறுநாறாக பிரித்து மேய்ந்திருக்கிறது. Hendrix-ன் முழு கட்டிரை படிக்க இங்கே செல்லவும்.

இவருதாங்க அந்த 'இந்தியா டுடே புகழ்' Hendrix (பார்க்க கம்ப்யூட்டர் இஞ்சினியர் மாதிரி இருக்காரு. ஏமாத்திரலாம்னு நினைச்சுட்டாங்களோ?)


இந்த சம்பவங்களில் எனக்கு தோன்றும் சில கருத்துக்கள்,
  • தென்னிந்தியாவில் ரஜினியைப்பற்றி தெரியாதவர்கள் உண்டா? அப்படி இருக்கையில் ரஜினியை யாரோ புது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுபோல் அமைந்திருக்கும் அந்த தலையங்கம் உண்மையில் நகைப்புக்குரியதே. அந்த அசல் கட்டுரையின் நோக்கம் ரஜினியை மேல்நாட்டு வர்க்கத்தினருக்கு அறிமுகப்படுத்துவதற்காக எழுதப்பட்டது. அதை சம்பந்தமில்லாமல் வெளியிட்டதோடு இல்லாமல் அப்படியே காப்பி அடித்தது நல்ல காமடிதான். நம்ம ஊரு பக்கம் ஒரு ஜோக் சொல்வாங்க.. முன்னாடி இருந்த மாணவன பார்த்து எழுதியும் ஒருத்தன் பெயில் ஆனானாம். என்னன்னு பார்த்தா, முன்னாடி இருந்தவன் கெமிஸ்டிரி ஸ்டூடண்ட், இந்த பய பிஸிக்ஸ் ஸ்டூடண்ட்டாம். அந்த கத மாதிரில்ல இருக்கு!! 
  • அதோடு அந்த தலையங்கத்தை படித்த எந்த தென்னிந்தியனும் சிரிக்காமல் இருந்திருக்க மாட்டான். ரஜினியைப்பற்றி தென்னிந்தியாவில் ஏன் இந்தியாவிலேயே கூட இவ்வளவு கேவலமாக ரஜினியை அறிமுகப்படுத்தி யாரும் தலையங்கம் எழுதி இருக்க மாட்டார்கள்.
  • அந்த ஆசிரியரின் மன்னிப்பு கடிதத்திலும் யாருக்கு வருத்தம் தெரிவிக்கிறார் என்றே கூறவில்லை. அதுவும் விந்தைதான்.படிக்கும் வாசகர்களுக்கு என்ன புரிந்திருக்கும். ஒரு வேளை அவ்வாறு புரியாமல் போக வேண்டும் என்பதே அந்த மன்னிப்பின் நோக்கமோ? மன்னிப்பு கேட்ட மாதிரியும் ஆயிடுச்சு, மீசையிலும் மண்ணு ஒட்டல.
  • Hendrix அவருக்கு வந்த மன்னிப்பு கடித்ததை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. நமது இந்திய கலாச்சாரத்தில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்றாலே மன்னிப்பு கேட்டு விட்டதாகத்தான் அர்த்தம். அதாவது, I would like to apology என்றாலே அதுதான் மன்னிப்பு என்று அர்த்தம் அதன் சாரம்சம் புரியாமல் அவர் விமர்சிப்பது எனக்கு சரியென்று தோணவில்லை. ஆனால் அவரது கலாச்சாரத்தின்படி அவரது விமர்சனம் சரி என்று தோன்றியிருக்கலாம்.

இந்தியா டுடே காமடி டுடே ஆயிடுச்சோ?

குறிப்பு: பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லி, தமிழ்வெளி, தமிழ்மணம் ஆகியவற்றில் ஓட்டுப்போடுங்கள்.


4 comments:

vasan said...

நல்ல‌ ப‌கிர்வு கதிர்கா.
கிராம‌த்தில சொல்ல‌ற‌ மாதிரி,
'பெரிய‌வுங்க செஞ்சா பெருமாள் செஞ்ச‌ மாதிரி' இது.
இவ‌ர்க‌ளின் த‌வ‌றுக‌ளுக்கு, பாவ‌ம் 'ஜெட் லாக்' ப‌லி.
ப‌லி ஓரிட‌ம், பாவ‌ம் ஓரிட‌ம் தான்.

NaSo said...

Hendrix இன் கட்டுரை வெளியில வராம இருந்திருந்தா மன்னிப்பே கேட்டிருக்க மாட்டார். இந்தியா டுடே காமடி டுடே ஆகி ரொம்ப நாள் ஆச்சு.

கதிர்கா said...

@Vasan, @நாகராஜசோழன் MA - தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

பாவம் மன்னிச்சுடலாம்