எந்திரன் படத்த தலைவர் அறிவிச்சதிலிருந்தே அத கண்டிப்பா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.
நான் அமெரிக்கா வந்து மூணு மாசம் ஆகுது.
வரும்போதே மனைவியையும் அழைத்து வந்துவிட்டேன். இந்த நாட்டுல இன்னும் ஆறு வருஷம் இருக்கலாம்னு இருக்கேன். இன்னும் குழந்தை இல்லை. குழந்தை பிறந்து ஒரு அஞ்சு வயசுக்குள்ள இந்தியா போகலாம்னு இருக்கேன். குழந்தைக்கான முயற்சி...(அட, நான் பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பேன். நான் கீழே சொல்லப்போற செய்திக்கும் என் பிறக்காத குழந்தைக்கும் என்னங்க சம்பந்தம்? நீங்களும் ஒண்ணும் சொல்லாம கேட்டுட்டே இருக்கீங்க)
நான் ஸ்கூல்ல குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுற காலத்துல இருந்தே ரஜினி ஃபேனுங்க (எந்திரன்தான் ஹிட்டாயிடுச்சில்ல.. இப்ப இப்படி சொல்லிக்கலாம்தான்)
ஒரு வாரமா, சன் டிவியில வேற எந்திரன் பால்குடம், எந்திரன் மொட்டை, எந்திரன் பட்டைன்னு தொடர்ந்து தமிழகத்து தலைப்பு செய்தியா இததான் காட்டிடு இருக்கானேமே! எங்க வீட்டுல வாஸ்து சரியில்லங்குறதால சன் டிவி எல்லாம் தெரியாதுங்க (வீட்டு பால்கனி தெற்கு நோக்கி இருந்தா டிஷ் வைக்க முடியாதாம். வாஸ்து பார்த்து ஒரு வீடு கூட வாடகைக்கு எடுக்க தெரியலன்னு எங்க வீட்டுக்காரம்மாவுக்கு என் மேல ரொம்ப கோபம். எனக்கு தெற்கு ஒத்துக்கிட்டாலும் சன்னுக்கு ஒத்துக்காதுன்னு எனக்கு எப்படிங்க தெரியும்?). நான் யூடியுப்ல ஒரு பால்குட அபிஷேகத்த பார்த்தேன். அப்படியே புல்லரிச்சிருச்சு.
இந்த வாரம் எந்திரன் ரிலீஸ் ஆனதிலிருந்து, எப்ப எப்பன்னு காத்திருந்து, நேத்து பார்த்துட்டேன். இப்பத்தான் ரொம்ப நிம்மதியா இருக்கு. ஆனா என்ன படம் முழுசா தியேட்டருல்ல கத்திகிட்டே இருக்காங்க. கொஞ்சம் அமைதியா படம் பார்த்தாங்கன்னா நல்லா இருக்கும். அவங்க கத்துறதுல்ல படத்துல பேசுறது பாதிக்குமேல புரியவேயில்ல.
எங்க ஆபிஸ் நண்பர்கள் ஒரு அஞ்சாறு பேரு மாசத்துக்கு ஒரு தடவ யார் வீட்டுலயாவது ஒண்ணு சேருவோம். அப்படித்தான் நேத்து நைட்டு ஒருத்தர் வீட்டுல பட்டறைய போட்டோம்.
அவர உங்களுக்கு கூட தெரிந்திருக்கும். அவரு சிறிது நாட்களுக்கு முன் எந்திரன் பார்க்கலையோ (இங்கே) என்று ஒரு கதை எழுதினார். இந்த மாசம் பட்டறை டாபிக்கே எந்திரன்தான். எப்படியும் இதுதான் டாபிக்கா இருக்குமுன்னுதான் நேத்தே அந்த படத்த பார்த்துட்டேன்.
முதல்ல அந்த கதை எழுதுனவருகிட்டதான் பட்டறை ஆரம்பித்த்து.
'ஏங்க உங்களுக்கு ஏதோ ரஜினியும் கலாவும் (கலாநதி மாறனதாங்க செல்லமா) கைக்காசு கொடுத்து படம் பார்க்க சொன்ன மாதிரி கதை எழுதியிருக்கீங்க?' கேட்டது நான்.
'அதெல்லாம் பின்நவீனத்துவ கதைங்க, உங்களுக்கு புரியாது'
'என்ன, பின்னாடி நவீன் துப்புன்ன கதையா? யாருங்க நவீனு'
'அதெல்லாம் எலக்கிய வார்த்த, சொன்னா புரியாது'
'சரி, அத விடுங்க, எந்திரன் எப்படி இருந்தது?'
அவர் அந்த கதைல கடைசில சொன்ன அதே வார்த்தையே சொன்னாரு, 'அட, நீங்க இன்னும் திருந்தலையா?'.
ஆனா ஒரு பெக்கு உள்ள போனோன, 'படம் சூப்பருங்க' அப்படின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே பெக்குக்கு இருக்குற மரியாத நட்புக்கு இல்லதாங்க.
இன்னொண்ணு நீங்க கவனிச்சங்களா? என்னதான் நாங்க நண்பேன்டான்னு சொல்லிகிட்டாலும் எங்களுக்குள்ள வாங்க போங்கன்னுதான் பேசிக்குவோம். அதுக்கு என்ன காரணம் எனக்கு தெரியல. இந்த ஊருல எல்லோரும் அப்படி பேசுறாங்கன்னு நானும் அப்படி பேசுறேன்.(நான் வந்த புதுசுல ஆபிஸ்ல ஒருத்தருகிட்ட இந்த வாரம் என்ன பண்ணுறடான்னு கேட்டு அவரு முறைச்ச முறைப்பு இருக்கே? அதுலேயிருந்து எப்பவும் வாங்க போங்கதான்)
பட்டறையோட முக்கியமான விவாதத்த மட்டும் சொல்லுறேன். கீழே உள்ள எல்லாமே நான் பேசியதுதான். அப்ப மத்தவங்க பேசுனது எங்கடான்னு கேக்குறீங்களா? குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுற காலத்துல இருந்தே ரஜினி ஃபேனா இருக்குறேன். உங்களுக்கு நான் சொன்னது முக்கியமா மத்தவங்க சொன்னது முக்கியமா?
ரஜினி ரஜினிதான். அவருக்கு இருக்குற மாஸ் யாருக்கும் இல்ல. வேறு யாரு நடிச்சிருந்தாலும் இந்தளவுக்கு ஹிட்டாயிருக்காது.
படத்துல ஓவர் கிராபிக்ஸ். தேவையில்லாத இடத்துல எல்லாம் கிராபிக்ஸ்.
ரோபோ செய்யுற ஒருசில ஆக்டிங் அந்நியன் ரெமோ மாதிரி இருக்கு
க்ளைமேக்ஸ் தான் இராம.நாராயணன் ஹைடெக்கா எடுத்த மாதிரி இருக்கு
சந்தானமும், கருணாஸும் படத்துல வேஸ்ட்
ஷங்கரின் க்ளிஷே நிறையா இருக்கு (இந்த வார்த்தைய எனக்கு அறிமுகப்படுத்துன சுஹாசினி பேசும்படம் நிகழ்ச்சிக்கு நன்றி. ஆனா அவங்க ஏன் இந்த வார்த்தைய எல்லா படத்தோட விமர்சனத்துக்கும் யூஸ் பண்ணுறாங்கன்னு தெரியல?)
ஐஸ்வர்யாராய்க்கு கொஞசம் வயசான மாதிரி தெரியுது. (உண்மை அதுதான அப்படிங்கிறீங்களா?)
அந்த கொசுசீன்தான் கொஞசம் கடுப்பேத்திருச்சு. தேவையில்லாம இழுத்துட்டாங்க
முதல் பாதில்ல மட்டும்தான் சுஜாதா டச் இருக்கு
நிறையா படத்துல இருந்து சுட்டு இருக்காங்க. SHORT CIRCUITன்னு ஒரு பழைய படத்து கதை கிட்டத்தட்ட இதேதான்.
(குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுற காலத்துல இருந்தே ரஜினி ஃபேனா இருந்திட்டு என்னடா படத்த போட்டு தாக்கிட்டு இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? நாலு பேருக்கு முன்னாடி நம்மள அறிவாளின்னு காட்டணும்னா ஃபேன ஆஃப் பண்ணி வைச்சா தப்பில்லைங்க)
ஒரு வழியா ரெண்டுமணி நேரம் எந்திரன பத்தி பேசினதுக்கு அப்புறம் படத்துல நாங்க கண்டுபிடிக்காத குறையே இல்லைன்னு ஆயிடுச்சு. அப்பத்தாங்க அந்த இன்னொரு நண்பரு வைச்சாரு ஆப்பு. கம்ப்யூட்டர் லேப்ல உட்கார்ந்து கருணாஸ் பிரியாணி சாப்பிடுற சீன்தான் இருக்குறதில்லேயே காமெடி அப்படின்னாரு. இந்த சீன் நான் பார்த்தப்ப வரலையேன்னு எனக்கு ஒரே ஃபீலிங் ஆயிடுச்சு. சீக்கரம் அந்த படத்த திரும்ப பார்த்து அந்த சீன் எப்ப வருதுன்னு நினைச்சுகிட்டே இப்பதாங்க வீட்டுக்குள்ள போறேன்.
வீட்டுக்குள்ள போனவுடனே வேகமாக கம்ப்யூட்டரை ஆன் செய்து அந்த தமிழ் இணையத்தளத்துக்கு சென்றேன். மீண்டும் அந்த எந்திரன் படத்த ஓட விட்டேன். அங்க இங்க ஃபார்வர்டு செஞ்சு கடைசில அந்த கருணாஸ் சாப்பிடுற பிரியாணிய கண்டுபிடுச்சுட்டேங்க. அந்த இடத்துலதான் ஒரு ரசிகரு ஒண்ணுக்கு போறதுக்காக எழுந்திருச்சிதுல அவரு தலை ஸ்கீரன மறைச்சிடச்சு. இந்த தியேட்டரு பிரிண்ட்ட எடுத்த மகராசன் கொஞ்சம் காமிராவ தள்ளி வைக்காத்தால அந்த சீனே தெரியாம போயிடுச்சு. தியேட்டரு பிரிண்ட் எடுக்குறவங்க எல்லாம் இனி கொஞ்சம் வேலைல கவனமா இருங்க!!
பி.கு: ரஜினி திரும்பவும் எந்திரன் ரெண்டாம் பாகம் எடுத்தாலும் எடுப்பாரு அப்படிங்குறாங்க. முன்னாடியே சொன்ன மாதிரி நான் ஸ்கூல்ல குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுற காலத்துல இருந்தே ரஜினி ஃபேனுங்க. அதனால இப்பவே அந்த எந்திரன் ரெண்டாம் பாகத்த கண்டிப்பா பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதனால ரெக்குவஸ்ட் பண்ணி கேட்டுக்கிறேங்க. நீங்க தியேட்டருக்கு போய் அத பார்த்தீங்கன்னா கொஞ்சம் அமைதியா படம் பாருங்க. நீங்க கத்துறதுல்ல படத்துல பேசுறது பாதிக்குமேல புரியவேயில்ல. நீங்க இப்படி கத்துனீங்கன்னா நான் எப்படி அந்த படத்துல உள்ள குறைநிறைகளை கண்டுபிடிக்கிறது.
1 comment:
Nalla eluthu nadai. Continue writing
Post a Comment