ஒரு பஸ்ஸும் பாவனாவும் பின்ன அந்த கிழவியும் - சிறுகதை

"மச்சி - உன் ஆளு பஸ் ஸடாப்ல நிக்கிறாடா?" ரவி வேகமாக வந்து சொன்னான்.



ரவி ஒரு மாநில கட்சியின் வட்ட செயலாளரின் எடுபிடி ஒருவரின் மகன். ரொம்ப பணக்காரன் என்று சொல்ல முடியாவிட்டாலும் பட்ஜட் போட்டு செலவு செய்யும் குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல.

இஸ்பலானி சென்டரில் போகவரும் பெண்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த அருண், இதை சொன்ன ரவியை ஆச்சிரயமாக பார்த்தான்.

ரவியும் அருணும் ஏதோ ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கே படிப்பது அந்த கல்லூரி பேராசியர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

"அவளுக்கு மூணு மணிக்குதானடா கிளாஸ் முடியும்"

"தெரியல மச்சி. ஆனா நான் இங்க வரும்போதுதான் அவ கரெக்டா பஸ் ஸடாப்புக்கு வந்தா"

இவர்கள் அருணின் ஆளு என்று பேசிக்கொண்டிருக்கும் அந்த பெண் பாவனா, நுங்கம்பாக்கத்திலுள்ள சி.ஏ. இன்ஸ்டியூட்டில் படித்துக்கொண்டிருக்கிறாள். சினிமா நடிகை பாவனா போல் இல்லையென்றாலும் சுடிதாரணிந்த ஸ்னேகா போல் இருப்பாள்.

கட்டாத கட்டிடத்திலெல்லாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதி அப்பா இருக்கும்போது அருணுக்கு இந்த பாவனாமேல் ஆசை வந்தது தப்பில்லைதானே!

பாவனாவின் அப்பா ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் மாதவன். அதனால் அவளுக்கு எப்போதும் பஸ்தான். ஆட்டோ செலவு என்பது அவர்கள் வீட்டின் ஒரு வார சாப்பாட்டுக்கு ஆகும் செலவு.

அருண் வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு பஸ் ஸடாப்பை சுற்றி வந்தான். இவன் கிட்டதட்ட ஒருவாரமாக அவளை சுற்றி வருவதால் அவளுக்கும் இவனை தெரிந்திருந்தது. இவனை கண்டும் காணாத்து போல் இருந்தாள். அவன் மூன்று முறை சுற்றிவிட்டு மீண்டும்
இஸ்பலானி சென்டர் வந்தான். ரவி அவனுக்காக காத்திருந்தான் கையில் சிகரெட்டுடன்.

"அவ என்ன பார்க்குறா மச்சி, ஆனா மடிய மாட்டேங்குறா?"

"பைக்ல டிராப் பண்ணவான்னு கேளு"

"முந்தாநேத்து கேட்டதுக்குதான் உன் பைக்கு அந்த பஸ்ஸவிட விலை கம்மிதான்னு சொல்லிட்டு பஸ்ல போயிட்டா!"

"இப்ப என்னடா அந்த பஸ்ஸு வரலைன்னா அவ உன் பைக்ல வருவாளா?"

"வருவான்னு நினைக்கிறேன். ஆனா அந்த பஸ்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும்ல"

"சரி, அந்த பஸ் வராம நான் பார்த்துக்குறேன். நம்ம ஃபியஸ்டா பார்ல ஃபுல் பார்ட்டி செலவு உன்னோடது.. ஓகேயா?"

"அந்த பஸ் வராம முதல்ல செய்.. பார்ட்டி கண்டிப்பா உண்டு"

ரவி யாருக்கோ செல்போனில் பேசினான். பிறகு அருணிடம் வந்தான்.

"சிட்டி ஃபுல்லா இன்னும் ஆறேழு மணி நேரத்துக்கு பஸ் ஓடாது"

"இவரு பெரிய மினிஸ்டரு. சும்மா ஜோக் அடிக்காதடா"

அருண் நம்பிக்கையில்லாமல் அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தான்.

ஆனால் சிறிது நேரத்திறகெல்லாம் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. எல்லோரும் பஸ் ஊழியர்களை திட்டிக்கொண்டிருந்தனர்.

ரோட்டில் வந்து பாவனாவை பார்த்துக்கொண்டிருந்த அருணுக்கு பஸ் வராதது பற்றி யாரோ கூறிக்கொண்டிருந்தது கேட்டது.
"வள்ளுவர் கோட்டத்துகிட்ட யாரோ காலேஜ் பசங்க பஸ் கண்டக்டர்கிட்ட தகறாறு பண்ணிட்டாங்களாம். அவங்க யாருன்னு தெரியலையாம். ஆனா அவங்கள கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணுற வரைக்கும் பஸ்ஸ எடுக்க மாட்டோம்னு டிரைவர் கண்டக்டர் எல்லாம் அங்கங்க பஸ்ஸ நிறுத்திட்டு ஸ்டிரைக் பண்ணுறாங்களாம்"

அருணுக்கு ரவியின் திறமை புரிந்து மனதுக்குள் சிரித்தான்.

அடுத்த கால் மணிநேரத்தில் கோடம்பாக்கத்தை நோக்கி சந்தோஷமாக பைக்கில் பயனித்துக்கொண்டிருந்தான். அவன் பைக்கில் அவனுடம் பாவனாவும் சற்று தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.

கோடம்பாக்கம் பிரட்ஜை க்ராஸ் செய்யும்போது அந்த பஸ் ஸ்டாப்பில் கையில் வெங்காய மூட்டையுடன் வேகாத வெயிலில் பஸ்ஸூக்கு காத்திருந்த ராசாத்தி கிழவியை அருண் பார்த்திருக்க மாட்டான். இஸ்பலானி சென்டரில் இன்னும் சிகரெட்டு பிடித்துக்கொண்டிருக்கும் ரவிக்கும் அங்கேயிருந்து கோடம்பாக்கம் பஸ் ஸ்டாப் கண்ணுக்கு தெரியாது.

அடுத்த பஸ் எப்போ வருமென்று புரியாமல் மார்க்கெட்டுக்கு கொண்டு போக வேண்டிய வெங்காய மூட்டையுடன் காத்திருக்கும் ராசாத்தி கிழவியிடம் இன்னும் ஆறேழு மணிநேரம் ஆகும் என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கும் கோடம்பாக்கம் பஸ் ஸ்டாப்பும் அந்த ராசாத்தி கிழவியும் கண்ணுக்கு தெரியவில்லையெனில் பரவாயில்லை, நான் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்கிறேன்.