இலங்கைக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்தம் இல்லை - சிறுகதை

முன் குறிப்பு - பெரியோர்களே தாய்மார்களே, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்தம் இல்லை, சம்பந்தம் இல்லை, சம்பந்தம் இல்லை. எல்லாரும் கேட்டுகிட்டீங்களா?

யானையன் தோட்டத்து ஆட்டுக்குட்டிகள் - சிறுகதை

ஒரு ஊரில் யானையன் தோட்டம்னு ஒரு தோட்டம் இருந்துச்சு.
பெரிய்யயாதான் இந்த தோட்டத்துக்கு முதலாளி. அந்த தோட்டத்துக்கு கீழவாசல் பக்கமா சிங்கையன் தோட்டமும் மேலவாசல் பக்கமா பல தோட்டங்களும் இருந்துச்சு. இந்த கதைக்கு மேலவாசல் பக்கத்துக்கும் சம்பந்தமில்லைங்குறதால நம்ம கீழ வாசலுக்கு மட்டும் போவோம்.

அந்த யானையன் தோட்டத்துல நிறைய ஆட்டுக்கொட்டில்கள் இருந்துச்சு. ஒரு சில சமயம் இந்த  தோட்டத்து ஆடுங்க சிங்கையன் தோட்டத்துக்கு போயி புல்லு மேய்ஞ்சுடும். அங்க இருக்குற காவல்காரங்க இந்த ஆடுங்கள போட்டு பின்னி எடுத்திடுவாய்ங்க. அதுக்காக என்ன பண்ணுனாங்கன்னா ரெண்டு தோட்டத்துக்கு நடுவலயும் ஊதா பெயிண்டால கோடு போட்டு ரெண்டு பக்க ஆடுங்க கிட்டயும் அத தாண்ட கூடாதுன்னு சொல்லி வைச்சாங்க. (ஏன் வேலி கட்டலைன்னு எல்லாம் கேட்க கூடாது ஆமாம்!! கதை என் இஷ்டத்துக்கு தான் இருக்கும்.)


சரி, கதைக்களத்த பார்த்தாச்சு. கதைக்கு போவோம்.கொஞ்சம் இருங்க. அங்க பாருங்க. சிங்கையன் தோட்டத்து ஆடுங்க இந்த தோட்டத்துக்குள்ள வந்ததால காவலாளிங்க பிடிச்சுட்டாங்க. போச்சு, அடி பின்ன போறாங்கன்னு நீங்க நினைச்சீங்கன்னா, நீங்க ரொம்ப அப்பாவிங்க. வெயிட் ப்ளீஸ்.

உம்.. பார்த்தீங்களா. அந்த தோட்டத்து ஆடுங்கள கொஞ்ச நேரம் கட்டி வைச்சுட்டு விட்டுட்டாங்க. அந்த காவலாளிங்களே பத்திரமா அந்த ஆடுங்கள சிங்கையன் தோட்டத்துக்கு கொண்டுபோய் விட்டுட்டங்க. சொன்னேன்ல யானையன் தோட்டத்து காவலாளிங்க ரொம்ப நல்லவங்க பாஸ்.


பாருங்க, இப்படி பேசிப்பேசியே கதைய விட்டுட்டோம். அதோ கொஞ்ச ஆட்டுக்குட்டிங்க வர்றாங்க. என்ன பேசுறாங்கன்னு கேளுங்க. எங்களுக்கு ஆட்டுக்குட்ட பாஷை தெரியாதுங்குறவங்க அப்படியே கதை நல்லா இருக்குன்னு பின்னூட்டமிட்டு இடத்த காலி பண்ணுங்க.

"டேய், ரங்கா. என்னடா இன்னைக்கு சாப்பிட எதுவும் கிடைக்கல"

"ஆமா ராக்கி, என்ன பண்ணுறது. அதோ அந்த தோட்டத்துல பார்த்தையா. புல்லு தெரியுது."

"டேய் அதுக்காக அங்க போனா பின்னி எடுத்துடுவாய்ங்க"

"இதெல்லாம் பார்த்தா வயித்த கழுவ முடியுமா. போயி பத்து நிமிஷத்துல வந்திருவோம்"

ராக்கிக்கு இதில் இஷ்டம் இல்லையென்றாலும் ரங்காவுக்காக அந்த தோட்டத்துக்கு சென்றான்.

அவர்கள் சென்ற சில நிமிடங்களில் சிங்கையன் தோட்டத்து காவலாளிங்க இந்த ரெண்டு ஆடுகளையும் பார்த்துட்டாங்க. ரங்காவும் அவங்கள பார்த்திருச்சு. "டேய், எஸ்கேப்புடா"ன்னு கத்திகிட்டு ஒரே ஓட்டமா இந்த தோட்டத்துக்கு வந்துட்டான். திரும்பி பார்த்தா அந்த காவலாளிங்க அடி பின்னி எடுத்ததுல ராக்கி செத்தே போயிட்டான். ரங்கா நேரா அவன் கொட்டிலுக்கு போயி அந்த கொட்டில்ல இருந்த சில வயசான ஆடுங்ககிட்ட சொன்னான்.


இந்த மாதிரி பல தடவ நடக்குறதால அந்த வயசான ஆடுங்க எல்லாம் கூடி பேசி இதுக்கு நடவடிக்கை எடுக்க வைக்கணும்னு முடிவு பண்ணுனாங்க.

முதல்ல தங்களோட காவலாளிங்ககிட்ட போனாங்க. கையில கம்ப பிடிச்சுகிட்டு காவல் காத்துட்டு இருந்தவங்க இந்த வயசான ஆடுங்கள பார்த்ததும் விசாரிச்சாங்க.

"என்ன, எல்லாம் ஒண்ணா வந்திருக்கீங்க?"

"அய்யா, இன்னைக்கு அந்த தோட்டத்துக்கு போன ராக்கிய அந்த பக்க காவலாளிங்க கொன்னு போட்டுட்டாங்க"

"நீங்க ஏய்யா அந்த பக்கம் போறீங்க"

"தெரியாம போயிட்டோம்யா.. ஆனா அதுக்காக கொன்னா போடணும்"

"அவங்க வேணும்னே கொன்னுருக்க மாட்டாங்க. ஏதோ தெரியாம நடந்திருக்கும். விடுங்க. போயி வேற வேலய பாருங்க"

இந்த ஆடுங்களுக்கு இது வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சுடுச்சு. சரி நம்ம கொட்டிலோட மானேஜர்கிட்ட போயி சொல்லலாம்னு முடிவு பண்ணுனாங்க.
சின்னய்யா வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சாங்க.



அதோ அந்த வீடு தெரியுதே. அங்க இருக்குற சின்னய்யாதான் அந்த கொட்டிலுக்கு ஆல்-இன்-ஆல் அழகுராஜா, மேனேஜர் எல்லாம். அந்த வீட்டுக்கு முன்னாடி ஒரு சின்ன பொண்ணு விளையாடுதே. அந்த பொண்ணு சின்னய்யாவோட பொண்ணுதான். அந்த பொண்ணோட பட்டுப்பாவாடை ரொம்ப நல்லா இருக்குல்ல. எங்க எடுத்ததுன்னு போயி கேட்போம் வாங்க. உங்களுக்கு கேட்க இஷ்டமில்லைன்னா விடுங்க, எனக்கு கேட்கோனுங்க.

"என்னம்மா, எப்படி இருக்குற. அந்த பட்டுப்பாவாடை ரொம்ப நல்லா இருக்கும்மா?"

"ஓ.. கதாசிரியரா.. எப்படி இருக்கீங்க. இந்த பாவாடையா? இது எங்க அப்பாரு பெரிய்யயாகிட்ட சண்ட போட்டு வாங்கி கொடுத்தாரு. பெரிய்யயா இந்த மாதிரி பட்டுல ஒரு இருவது வேட்டி, பாவாடைதான் வைச்சிருந்தாரு. எங்க அப்பாரு முடியாம இருந்தாலும், எனக்கும் என் அண்ணனுக்கும் வேணும்னு பெரிய்யயா வீட்டுக்கு கஷ்டப்பட்டு போயி வாங்கிட்டு வந்தாரு. நல்லா இருக்கா?"

"ரொம்ப நல்லா இருக்கும்மா"

அடடா அதுக்குள்ள அந்த வயசான ஆடுங்க இந்த வீட்டுக்கு வந்துட்டாங்க.

சின்னய்யா அப்பதான் யாரிகிட்டையோ போன் பேசிட்டு வைச்சாரு.
"என்னங்கைய்யா இந்த பக்கம். எல்லாரும் நல்லா இருக்கீங்களா? உங்களுக்காகதான் இப்படி உழைச்சிட்டு இருக்கேன்"

"இருக்கோம்யா" ஆடுங்க சுரத்தில்லாம பதில் சொன்னாங்க.

"ஏன், ஒரு மாதிரி பதில் சொல்லுறீங்க. உங்களுக்கு நகம் வெட்ட இலவசமா ஆளுக்கு ஒரு நகவெட்டி கொடுத்தனுப்பிச்சேனே வந்திருச்சா? "

"வந்திருச்சுங்கைய்யா"

"அப்புறம் என்ன, அதோட உங்களுக்கு தல சீவ இலவசமா ஆளுக்கு ஒரு சீப்பு  கொடுத்தனுப்பிச்சேனே"

"அதுவும் வந்திருச்சுங்கைய்யா"

"அப்புறம் என்னதான் பிரச்சன. எனக்கு நிறைய வேலை இருக்கு"

இந்த ஆடுங்க பசின்னால தோட்டத்த தாண்டுறதையும் அப்ப சிங்கையன் தோட்டத்து ஆளுங்க அடிச்சு கொல்லுறாங்கன்னும் எடுத்து சொன்னாங்க. சின்னய்யாவும் பொறுமையா கேட்டாரு.

"என்னைய என்ன பண்ண சொல்லுறீங்க. அவங்க தோட்டத்துக்கு போனது தப்புதான?. அவங்க அடிக்குறாங்க அப்படிங்குறதுக்காக நம்ம என்ன கம்ப எடுத்துட்டு சண்டைக்கா போக முடியும். நம்ம பெரிய்யயா அதுக்கு ஒத்துக்க மாட்டாரு"

"அப்ப என்ன தான்யா பண்ணுறது?"

"சரி இருங்க, நான் பெரிய்யயா கிட்ட சொல்லி அந்த தோட்டத்து முதலாளிகிட்ட பேச சொல்லுறேன்"

"ரொம்ப நன்றிங்க"

சின்னய்யா பிறகு அந்த போன தள்ளி வைச்சுட்டு அதுக்கு கீழ இருந்த பேப்பர எடுத்து ஏதோ எழுதுனாரு. அப்புறம் அவரு பொண்ண கூப்பிட்டாரு.

"அம்மாடி, இத லெட்டர நான் கொடுத்தேன்னு  பெரிய்யயா வீட்டுக்கு போயி அவருகிட்ட நேரடியா கொடுத்திடு.. என்ன. அதோட, உன் அண்ணனுக்கு கொடுத்த பட்டு வேட்டிடல கரையா இருக்காம். வேற புது வேட்டி வந்தோன சொல்ல சொல்லு. அப்புறமா நானே வந்த வாங்கிக்கிறேன்னு சொல்லு. சரியா?"

"சரிப்பா"

அந்த ஆடுங்க பிறகு எல்லாம் சரியாயிடும்னு நம்பிக்கையோட கொட்டிலுக்கு திரும்புனாங்க.


மறுநாள் காலை,
சின்னய்யா கொடுத்த கடிதம் பெரிய்யயா வீட்டு டேபிளில் ஒரு ஓரத்தில் இருந்தது.
ரெண்டு தோட்டத்து காவலாளிங்களும் காலை சாப்பாட்ட முடிச்சுட்டு காவல் காக்க வந்துட்டாங்க.
மறுபடியும் ரெண்டு ஆடுங்க பேசுறாங்க.
"டேய், இந்த பக்கம் புல்லே இல்ல. அந்த பக்கம் போயிட்டு ஒரு ஐஞ்சு நிமிஷத்துல வந்திரலாம்"

பின் குறிப்பு - பாருங்க, முன்னாடியே சொன்ன மாதிரி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இந்த ஆட்டுக்குட்டிங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நீங்க பாட்டுக்கு எதையாவது கற்பனை செஞ்சீங்கன்னா அதுக்கும் நானோ, சின்னய்யாவோ, பெரியய்யாவோ பொறுப்பல்ல.

முக்கிய குறிப்பு: பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லி, தமிழ்வெளி, தமிழ்மணம் ஆகியவற்றில் ஓட்டுப்போடுங்கள்.

டிஸ்கி - இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவப்பது என்னவென்றால் கீழே உள்ள செய்தி தொகுப்புக்கும் மேலே உள்ள கதைக்கும் கூட சம்பந்தமில்லை. சொல்லுறத சொல்லிப்புட்டேன் பார்த்துக்கோங்க!!!


ஜன 11ஐந்து இலங்கை மீனவர்கள் கைது
பிப் 10இந்திய மீனவர்களின் விசைப்படகின் கண்ணாடி உடைப்பு
பிப் 15ஒன்பது இலங்கை மீனவர்கள் கைது
பிப் 20பத்து இந்திய மீனவர்கள் கைது
பிப் 24கைதான 27 இலங்கை மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்
மார் 8ஐந்து இலங்கை மீனவர்கள் கைது
மார் 31தனுஷ்கோடியில் நிரந்தர எல்லைத்தூண் அமைக்க ஆய்வு
மே 21இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - இலங்கை அமைச்சர்
ஜூன் 5ஐந்து இலங்கை மீனவர்கள் கைது
ஜூன் 8தமிழக மீனவர்களை மீது வெறித்தனமாக தாக்குதல்
ஜூன் 16உயிருக்கு போராடிய 5 இலங்கை மீனவர்கள் மீட்பு
ஜூன் 21முன்னர் கைதான இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை
ஜூன் 28ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல்
ஜூலை 8இலங்கை கடற்படை தாக்குதலில் நாகை மாவட்ட மீனவர் பலி
ஜூலை 9மீனவர் விவகாரத்தில் தலையிட பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்
ஜூலை 29பதினைந்து இலங்கை மீனவர்கள் 15 பேரை கைது
ஆக 1இந்திய மீனவர்களை சுட மாட்டோம் என இலங்கை அரசு அறிவிப்பு - மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
ஆக 12 இலங்கை செல்லும்போது மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் - வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
ஆக 22இரண்டு இலங்கை மீனவர்கள் கைது
செப் 5தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
அக் 5ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்
அக் 22தமிழக மீனவர்களை குறிவைத்து இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை - தென் பிராந்திய கடற்படைத் தளபதி சுஷில்
அக் 26இந்திய மீனவர்களின் வலைகள் வெட்டி வீசப்பட்டது


6 comments:

வினயன் said...

புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி

YOGA.S Fr said...

//தமிழக மீனவர்களைக் குறி வைத்து இலங்கைக் கடற்படை தாக்குவதில்லை//உண்மை தான்!அவர்களுக்குக் குறி வைக்கத் தெரியாது!சும்மா எழுந்தமானத்துக்கு சுடும்பொழுது இந்திய மீனவர்கள் மீது பட்டு விடுகிறது!

சி.பி.செந்தில்குமார் said...

சமூக விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை

கதிர்கா said...

நன்றி சி.பி.செந்தில்குமார்

கதிர்கா said...

நண்பர் சி.பி.செந்தில்குமார் - கதை எழுதியிருக்கேன். அதப்போயி கட்டுரைன்னு சொல்லிட்டங்களே!! ;-)

Anonymous said...

arumi