எங்கள் தெரு சிட்டுக்குருவிகள் எங்கே போயீன?
இன்றோடு எனக்கு பதினாறு வயது!
நான் ஆறாவது பிறந்த நாளை இந்த தெருவுக்கு வந்த பிறகுதான் கொண்டாடினேன்
ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளுக்கு
மிட்டாய் கொடுக்க போனபோது
என் தலைக்குமேல் பத்துபதினைந்து சிட்டுக்குருவிகள்...
என் எட்டாவது வயதில், எங்கள் வீட்டின் முன்
நான் நட்டிருந்த கொய்யாச்செடி முளைப்பதற்குள்
சாக்கடைக் குழாயாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த பத்துபன்னிரெண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?
என் பத்தாவது வயதில், எங்கள் வீட்டின் முன் இருந்த மாமரம்
நான் பள்ளி சென்றுவருவதற்குள்
மின்சாரக் கம்பமாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த எழெட்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?
என் பன்னிரெண்டாம் வயதில், எங்கள் வீட்டின் முன் இருந்த மண்ரோடு
நான் ஆயா வீட்டில் லீவு முடிந்து வருவதற்குள்
தார் ரோடாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த நாலைந்து சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?
என் பதினாலாம் வயதில், எங்கள் வீட்டு பழைய டிவி
புது கேபிள் மாட்டியதிலிருந்து
எண்பது சேனல்கள் கொண்டதாய் மாறிவிட்டிருந்தது!
ஆனால் அப்போது இருந்த ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகள்
இப்போது எங்கே போயீன?
நேற்று எங்கள் வீட்டில்
இன்டெர்நெட் வாங்கியதலிருந்து
கம்ப்யூட்டரில் உலகத்தையே பார்க்கலாமாம்!
ஆனால் இப்போது எங்கள் தெருவில்
ஒரு சிட்டுக்குருவியைக் கூட பார்க்க முடியவில்லை,
அவையெல்லாம் எங்கே போயின உங்களுக்குத் தெரியுமா?
எனக்கு சிட்டுக்குருவிகளை ரொம்ப பிடிக்கும்!!!
1 comment:
அழகு...
Post a Comment